ரஜினி உடல்நிலை அரசியலுக்கு உகந்ததல்ல.. அரசியலுக்கு வராதது மகிழ்ச்சியே.. வெங்கய்யா நாயுடு பளீச்!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது மகிழ்ச்சியே என வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். அதேபோல், கொரோனா தொற்று பரவலால் தனது முடிவை ரஜினி மாற்றிக் கொண்டதாகவும், அதனால் தனக்கு மகிழ்ச்சியே என்றும் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
சேப்பியன் ஹெல்த் ஃபவுண்டேஷன் அமைப்பின் 25-வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறுநீரக நலனுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் நாடக நடிகர் மாது பாலாஜி, சேப்பியன் ஹெல்த் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ராஜன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெங்கய்யா நாயுடு பேச்சு
இந்த நிகழ்ச்சியில் வெங்கய்யா நாயுடு பேசுகையில், சேப்பியன் ஹெல்த் ஃபவுண்டேஷன் செய்து வரும் சேவை மிகவும் போற்றுதலுக்குரியது. கடந்த 25 ஆண்டுகளாக சிறுநீரக நோய்களுக்கான மருத்துவச் சேவையை ஏராளமான மக்களுக்கு வழங்கி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த தகவல் பத்திரிகையாளர் குருமூர்த்தி மூலமாக எனக்கு தெரியவந்தது.

அரசியலுக்கு வர வேண்டாம்
உடனே ரஜினிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் நல்ல மனிதர். உங்கள் உடல்நலனுக்கு அரசியல் உகந்ததல்ல. எனவே, அரசியலுக்கு வர வேண்டாம் என்று தெரிவித்தேன். அரசியல் ஆரோக்கியமற்றது, அரசியலுக்கு வந்தால் உடல்நலத்தோடு இருக்க வேண்டும். ஆனால், அதற்கான சூழல் தற்போதைய அரசியல் காலகட்டத்தில் இருப்பதில்லை. அதனால்தான் ரஜினியிடம் அவ்வாறு தெரிவித்தேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

ரஜினியால் மகிழ்ச்சி
எனினும், அதன்பின் கொரோனா தொற்று பரவலால் தனது முடிவை ரஜினி மாற்றிக் கொண்டார். அது மகிழ்ச்சியாக இருந்தது. இதை வைத்து இளைஞர்களை அரசியலுக்கு வர வேண்டாம் என கூறுவதாக எண்ண வேண்டாம். நீங்கள் அரசியலுக்கு வரும்போது கொள்கை, நேர்மை, உடல்நலன், சேவை மனப்பான்மை உள்ளிட்ட பண்புகளை பின்பற்றுவது அவசியமாகும். நம் முன்னோர்கள் இயற்கையுடன் இணைந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நமக்கு கற்பித்து சென்றுள்ளனர்.

யோகா செய்தால் நல்லது
ஆனால், இன்றைய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சார வாழ்வியலை பின்பற்றி வருகின்றனர். அது நமக்கான வாழ்வியல் முறையல்ல. இளைஞர்கள் துரித உணவு பழக்கங்களை கைவிட்டு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். நல்ல தூக்கம், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, யோகா, மகிழ்ச்சியான மனநிலை ஒரு மனிதனுக்கு நீண்ட ஆயுளை தரும். தினமும் யோகா செய்தால் உடல்நலன் மேம்படும். அதேபோல், அனைவரும் அவரவர் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications