தென்படாத பிறை.. தமிழ்நாட்டில் மார்ச் 24ல் ரமலான் நோன்பு துவக்கம்.. அரசின் தலைமை காஜி அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர்.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாத நிலையில் மார்ச் 24ம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்கும் என அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் அறிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் மார்ச் 23ம் தேதி ரமலான் நோன்பு துவங்கும் நிலையில் ஒருநாள் கழித்து தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு தொடங்க உள்ளது.
இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள்.
இந்த நோன்பை மரியாதைக்குரிய அடையாளமாகவும், தங்களை தூய்மைப்படுத்த அல்லாவின் கருணையை பெறவும் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகின்றனர். நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.

ரமலான் நோன்பு
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இத்தகையை நோன்பு நோற்பார்கள். சூரிய உதயத்திற்கு முன் மட்டும் உணவு சாப்பிடுகிறார்கள். இதனை சஹர் என்பார்கள். அதன்பிறகு முழுநாளும் உணவு, தண்ணீர் இன்றி நோன்பு நோற்பார்கள். அதன்பிறகு மாலையில் நோன்பை முடித்து உணவு எடுத்து கொள்வார்கள். இந்த உணவை இப்தார் என்பார்கள். பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம்.

அரசு தலைமை காஜி அறிவிப்பு
ஒவ்வொரு முறையும் வானில் பிறை பார்த்து ரமலான் நோன்பு துவங்கும். இந்நிலையில் தான் ரமலான் நோன்புக்கான பிறை இன்றும் தென்படவில்லை. இந்நிலையில் தான் தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் சார்பில் ரமலான் நோன்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாளை மறுநாள் நோன்பு
அதன்படி தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை தென்படவில்லை. நாளை மறுநாள் முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் கூறியுள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சவூதி அரேபியாவுக்கு மறுநாள் ரமலான் நோன்பு தொடங்கும். அதன்படி சவூதி அரேபியாவிலும் பிறை தென்படவில்லை எனக்கூறி வரும் 23ம் தேதி நோன்பு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மார்ச் 24ம் தேதி நோன்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்போது தமிழ்க அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

6,500 மெட்ரிக் டன் அரிசி
முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் ரமலான் நோன்புக்காக அரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்கப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications