அல்லாஹும்ம அஹில்லஹூ அலைனா பில் அம்னி வல்.. தெரிந்தது பிறை.. நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்!
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை தெரிந்ததை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் ரமலான் நோன்பு கடை பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையக தலைமை காஜி தாவுத் கைசர் அறிவித்துள்ளார். இதன் மூலம் நாளை காலையில் இருந்து இஸ்லாமியர்கள் தங்களது நோன்பை கடைபிடிக்கின்றனர்.
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இதனையடுத்து அதிகாலை தொடங்கும் நோன்பு கடைபிடிக்கும் மக்கள் மாலை தொழுகைக்கு பிறகு நோன்பை முடித்துக் கொள்வர்.

இந்த மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இந்த மாதத்தில், தராவீஹ் எனும் இரவு நேர சிறப்பு தொலுகை நோன்பு காலத்தில் கடைபிடிக்கப்படும். தொடர்ந்து நோன்பு முடிந்ததும் அனைவரும் கூடி தொழுகைக்கு பிறகு உணவு எடுத்துக் கொள்வார்கள்.
பல நூறு ஆண்டு காலமாய் இஸ்லாமியர்கள் இதனை கடைப்பிடித்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து 30வது நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இதேபோல பிறை தெரிந்ததற்கு அடுத்த நாள் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. அந்த வகையில், நேற்று வானில் முதல் பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தார், குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கியது.
இந்நிலையில், இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை பிறை தெரிந்ததை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் ரமலான் நோன்பு கடை பிடிக்கப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையக தலைமை காஜி தாவுத் கைசர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று பிறை தென்பட்டுள்ளது. எனவே நாளை 02.03.2025 முதல் தமிழ்நாட்டில் புனித ரமலான் மாத நோன்பு ஆரம்பமாகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறியுள்ளார்.
ஹிஜ்ரி 1446 ரமலான் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை சவூதி அரேபியாவில் சுதைர் மற்றும் துமைர் ஆய்வகங்களில் நேற்று தென்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு ரமலான் புனித மாதம் இன்று இரவு, பிப்ரவரி 28ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறை தெரிந்த நிலையில், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் இன்றிரவு முதல் தங்கள் தராவீஹ் தொழுகையைத் தொடங்குகிறார்கள். தமிழகத்தில் இன்று பிறை தெரிந்ததால், நாளை முதல் நோன்பு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications