சீன உளவு கப்பலை அனுமதித்து துரோகம் செய்த இலங்கை - தக்கப் பாடம் புகட்ட இராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை : இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன உளவு கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ள இலங்கையின் துரோகத்தை, இந்தியா இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகம் சீனாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துறைமுகத்தில், சீன ராணுவத்திற்குச் சொந்தமான யுவான் வாங்க்-5 என்ற நவீன உளவு போர்க் கப்பல், இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு, நாளை மறுநாள் வரவுள்ளது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் வந்துள்ள இந்த சீன உளவுக் கப்பல் மூலம், இந்தியாவின் ராணுவத் தளங்களை உளவு பார்க்க முடியும் என்று இந்தியா கவலை தெரிவித்தது. எனவே, இலங்கை அரசு சீன ராணுவ கப்பலுக்கு அனுமதி வழங்கக்கூடாது என தொடர்ந்து மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கடும் பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசுக்கு, இந்திய அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை அளித்துள்ளது. இதைத் தவிர மனிதாபிமான அடிப்படையில், எரிபொருளையும் வழங்கி பல உதவிகளையும் செய்தது. இந்த உதவிகளை அனைத்தையும் மறந்துவிட்டு, இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன உளவு கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் இந்த நன்றி மறந்த நடவடிக்கைக்கு இந்தியாவின் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இலங்கையின் துரோகத்தை, இனியாவது மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன உளவுக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்!
சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும்; இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்தப் பிறகும் சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் சீன பாசத்திற்கு இது தான் எடுத்துக்காட்டு!
இலங்கையின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு டோர்னியர் 228 வகை போர் விமானத்தை இந்தியா நாளை இலவசமாக வழங்குகிறது. இப்படியாக ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டு தான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இதுதான் அதன் குணம்!
Recommended Video
இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications