தமிழகத்தில் 21 இடங்களில் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு! என்னென்ன பொருட்கள் பறிமுதல்! இதோ லிஸ்ட்
சென்னை: ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று தமிழ்நாட்டில் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக்கின் வீடு உள்பட மாநிலம் முழுவதும் இன்று 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்த முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். பாமகவில் செயல்பட்டு வந்தார். பாமகாவில் நகர செயலாளராக பதவி வகித்தார். இந்நிலையில் தான் கடந்த 2019 பிப்ரவரி 5ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மதமாற்ற நடவடிக்கையை ராமலிங்கம் எதிர்த்து வந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏராளமானவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் தான் இன்று காலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தனர். திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், திருப்பூர், விழுப்பூரம், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, மயிலாடுத்துறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மொத்தம் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருநெல்வேலியில் உள்ள எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக்கின் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனால் காலை முதல் சோதனை நடந்த இடங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதுபற்றி விசாரித்தபோது ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்பு கொண்டு தலைமறைவாக இருக்கும் 5 பேருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் இந்த வழக்கு தொடர்பாக சந்தேகங்கள் எழுந்த நபர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்படுவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனைக்கு பல இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சோதனைகள் நடக்கும் இடங்களின் முன்பு அவர்களின் உறவினர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் தமிழகத்தில் 21 இடங்களில் நடந்த என்ஐஏ சோதனை இன்று மாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக என்ஐஏ தரப்பில், ‛‛தமிழ்நாட்டில் மொத்தம் 21 இடங்களில் என்ஐஏ சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது டிஜிட்டல் டிவைஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி செல்போன், சிம்கார்டு, மெமரிகார்டுகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் தொடர்பு உடைய 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பற்றி துப்பு வழங்குவோருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications