ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ்.. நவாஸ் கனி அதிரடி!
சென்னை: யூடியூபர் சாட்டை துரைமுருகனிடம் ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன், சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் தொடர்ச்சியாக அரசியல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சாட்டை துரைமுருகன் வெளியிடும் வீடியோக்களில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகி வழக்குகள், கைது நடவடிக்கை வரை நீண்டுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.பி நவாஸ் கனி குறித்து கடந்த ஏப்ரல் 27ம் தேதி வீடியோ ஒன்றை, தனது சாட்டை சேனலில் பதிவிட்டிருந்தார் துரைமுருகன்.
அந்த வீடியோவில், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனியை மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காக, ஜமாத் மூலம் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு எம்.பி நவாஸ் கனி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு, நவாஸ் கனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சாட்டை துரைமுருகன் பேசியுள்ள வீடியோவில் உள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பாக உள்ளது. என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த அவதூறு பேச்சுக்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடாக சாட்டை துரைமுருகன் வழங்க வேண்டும். இந்த நோட்டீஸுக்க்கு பதில் அளிக்காவிடில் சாட்டை துரைமுருகன் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications