ராமேஸ்வரத்தில் மோடி.. திருச்சி, ராமநாதபுரம் சாலைகள் "பிளாக்".. பிரதமர் வருகையால் அதிரடி மாற்றங்கள்
சென்னை: பிரதமர் மோடி இன்று ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.. இதையொட்டி ராமநாதபுரத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, கடந்த 12-ம் தேதியில் இருந்து பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டு வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலும்; திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலங்களாக திகழ்கின்றன. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.
இதுதான் பிளான்: இன்று காலை 8:30 மணிக்கு திருச்சிக்கு தனி விமானத்தில் செல்கிறார் பிரதமர் மோடி.. 11:00 மணிக்கு காரில், சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் மோடி, தாயார், ரெங்கநாதர் மற்றும் அங்குள்ள சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
இன்று மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி தமிழ்நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் நேற்றைய தினம் 5 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டு, போக்குவரத்திலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி வருகை எதிரொலியாக ராமேஸ்வரத்திலும் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு பாதுகாப்பு: ராமநாதசுவாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் உள்ளதாவது
பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று ஜனவரி 20ம் தேதி நாளை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். இன்று பிற்பகல் 12 மணி முதல் 21ம் தேதி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
போக்குவரத்து: போக்குவரத்து அதேபோல இன்று பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
பகல் 12 மணி முதல் நாளை பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நாளை அதாவது ஜனவரி 21ம் தேதி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ராமேஸ்வரம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்றும், நாளையும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள்: பாதுகாப்பு நலன் கருதி ராமேஸ்வரம் நகரம் முழுவதும் இன்று, நாளை இரு நாட்களிலும் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் வருகையை ஒட்டி பாதுகாப்பு போலீசார் தங்குவதற்காக ராமேஸ்வரத்தில் உள்ள 12 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications