தமிழ்நாட்டில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதி தேர்வு திடீர் மாற்றம்.. ஊருக்கு போற பிளானை மாற்றுங்க
சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 10 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 4 முதல் 9-ம் வகுப்பு இறுதி தேர்வு அட்டவணையில் அரசு செய்துள்ள மாற்றங்களை பார்ப்போம்.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்துவிட்டது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது தேர்வு நடந்து வருகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்ளுக்கு வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் தேர்வு நடைபெற போகிறது.

தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 12ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட்டது. அதன்படியே அட்டவணையும் வெளியிட்டிருந்தது. இதை நம்பி பலரும் ஊருக்கு செல்ல பயணத்திற்கும் திட்டமிட்டார்கள்..
இந்நிலையில் திடீரென ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு. பள்ளி கல்வித்துறை ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையினை மாற்றி அமைத்துள்ளது,. வருகிற 2-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்கும் வகையில் வெளியான அட்டவணை ஏப்ரல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் முடிந்த பின்னர் தான் இரண்டு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:"ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதியை மாற்றி அமைக்க எம்.எல்.ஏ.க்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அதன் அடிப்படையில் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22-ந் தேதிக்கும், 12-ந் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 23-ந் தேதிக்கும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுரைகள் வழங்கிட வேண்டும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை தள்ளிப்போகிறது: தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்த அட்டவணையில் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் தேர்வை முடித்து 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அட்டவணை மாற்றம் செய்து வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் கோடை விடுமுறை எப்போது என்பது குறித்து தெளிவான அறிவிப்புகள் இல்லை.
அதேநேரம் ஏப்ரல்'8-ந் தேதிக்கு பிறகு மாணவர்கள் 22 மற்றும் 23-ந் தேதிகளில் நடைபெறும் தேர்வுக்கு வந்தால் மட்டும் போதும் என்பது உறுதியாகி உள்ளது. ஏப்ரல் 9ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு வருகிறது. அடுத்து ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. அடுத்தடுத்து விடுமுறை வருவதால் ரம்ஜானுக்கு சொந்த ஊர் செல்ல பலர் விரும்புவார்கள் என்பதால், தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில் தேர்வுகளை மாற்றி அமைத்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம் அரசின் அறிவிப்பினை நம்பி, ஏற்கனவே சொந்த ஊர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த பெற்றோர், தேர்தலுக்காக ஒரு முறையும், மீண்டும் பிள்ளைகளின் தேர்வுக்காக சென்னை வந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.. தேர்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் போது குழப்பங்கள் ஏற்படாத வகையில் வெளியிட வேண்டும் என்றும், திடீரென மாற்றி மாற்றி அறிவிப்பபது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications