குடும்ப அட்டைதாரர்களே.. ரேஷனில் வாங்கிட்டீங்களா? ஊழியர்கள் இந்த தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்த போறாங்க
சென்னை: ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவியானது சிம் கார்டு மூலம் இயக்கப்பட்டு வருகிறது.. ஆனால், நெட்வொர்க்குக்கு ஏற்றவாறு, பிஓஎஸ் கருவிகள் இருக்கவேண்டும். பல இடங்களில் நெட்வொர்க் ஸ்லோவாக இருப்பதாக புகார்கள் கிளம்புகின்றன.. எனவே, நெட்வொர்க் சேவையை வேகப்படுத்தி, பிஓஎஸ் கருவிகளையும் மாற்றித்தர வேண்டும் என்ற வேண்டுகோள்கள் சமீபகாலமாகவே வலுத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இது ரேஷன்தாரர்களுக்கு கலக்கத்தை உண்டுபண்ணி வருகிறது.
பொது வினியோக திட்டத்திற்கு தனி துறையை உருவாக்க வலியுறுத்தி, சென்னையில் செப்டம்பர் 12ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலர் தினேஷ்குமார் அதிரடியாக அறிவித்திருந்தனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து இவர்கள் பேசியபோது, "ரேஷன் பொருட்களை, உணவு துறையின் நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. ரேஷன் கடைகளை, கூட்டுறவு துறை நடத்துகிறது. இந்த இரண்டு துறைகளின் அதிகாரிகள் மட்டுமின்றி, பல்வேறு துறை அதிகாரிகளும் ரேஷன் கடைகளில் ஆய்வுக்கு வந்து, ஊழியர்களை மிரட்டுகிறார்கள்.
ரேஷன் கடை ஊழியர்கள்
எனவே, பொது வினியோக திட்டத்திற்கு, தனி துறையை உருவாக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதுடன், ரேஷன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள், செப்டம்பர் 12ம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டம் நடத்துவார்கள்" என்று தெரிவித்திருந்தனர்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை, உணவு துறையும், கூட்டுறவு துறையும் நடத்திவரும் நிலையில், இந்த கடைகளை, ஒரே துறையின் கீழ் கொண்டு வருவது, ஊதிய உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள், வரும் 12ம் தேதி, சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது பல தரப்பினரையும் அதிர வைத்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கள்
இதன்காரணமாக சென்னையில் நேற்றைய தினம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், கூடுதல் பதிவாளர் அம்ரித் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. எனினும், இதில், எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்த பேச்சுவார்த்தை தோல்விக்கு பிறகு, ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலர் தினேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, வரும், 12ம் தேதி திட்டமிட்டபடி, சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். ஊதிய உயர்வு வழங்கப்படும் வரை, இடைக்கால நிவாரணமாக மாதம், 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
பிஓஎஸ் மெஷின் எடை தராசு
ஏற்கனவே ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை கடந்த காலம்தொட்டே முன்வைத்து வருகிறார்கள்..
அதாவது, கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள 32 ஆயிரம் பகுதிநேர, முழுநேர ரேஷன் கடைகளுக்கு டிஎன்சிஎஸ்சி குடோன்களில் இருந்து அரிசி, கோதுமை, பருப்பு, சீனி என அத்தியாவசியப் பொருட்களை சாக்குடன் சேர்த்து 50.600 கிலோ மூட்டையாக அனுப்ப வேண்டும். ஆனால் 47.6 அல்லது 48.600 கிலோ அளவு தான் கடைகளுக்கு வருகிறதாம்.
லாரியில் மூட்டைகளுடன் ரேஷன் கடை பணியாளர்கள் வருவதால் எடை குறைவுக்கு அவர்களே காரணம் என திசை திருப்பிவிடுகிறார்களாம்.. எனவே குடோனில் இருந்து சரக்கை ஏற்றும்போது கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைத்து அளவிட்டு அனுப்ப வேண்டும், பிஓஎஸ் மெஷினை கம்ப்யூட்டர், எடை தராசுடன் இணைக்க வேண்டும், ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் மூட்டைகளை எடையிடுவதற்கு ஏற்ப கம்ப்யூட்டருடன் இணைந்த எடை தராசை சேர்க்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.
நெட்வொர்க் ஸ்லோ
அதுமட்டுமல்ல, நெட்வொர்க் ஸ்பீடு குறைவாக இருப்பதால் ஒரு கார்டுதாரர் பிஓஎஸ் மெஷினில் ரேகை வைத்து பதிவு செய்யும் போது உடனடியாக அவரது விவரங்கள் கிடைக்காமல் 'நெட் இணைப்பு' சுற்றிக் கொண்டே இருக்கிறதாம்.. அதேபோல விற்பனையாளர்களோடு எடையாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடந்த ஏப்ரல் மாதமும் மாநில அளவில் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், மீண்டும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.. பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழலில், ரேஷன் ஊழியர்களின் இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பு, ரேஷன்தாரர்களிடம் கலக்கத்தை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications