ஜூன் மாதம் பொறந்தாச்சு.. ஆர்பிஐ சொல்லப்போகும் முடிவு.. வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்கள் உஷார்!
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த வாரம் தனது நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ள நிலையில் வட்டி விகிதத்தை 5.25 சதவீதத்தில் மாற்றாமல் வைத்திருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சவால்களை ஏற்படுத்தும் என்பதால், ரிசர்வ் வங்கி எச்சரிக்கையான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்று கருதப்படுகிறது.

MPC கூட்டம்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட நாணய கொள்கைக் குழு (MPC) ஜூன் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் ஆலோசனை நடத்தி, ஜூன் 5-ம் தேதி இறுதி முடிவை அறிவிக்கும். ஏப்ரல் மாதத்தில் வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்த ரிசர்வ் வங்கி, தற்போதும் அதே நிலைப்பாட்டைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல்
மேற்கு ஆசியப் பகுதியில் தொடரும் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்வு, சப்ளை செயின் சிக்கல்கள் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றது என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் ரிசர்வ் வங்கி தனது பணவீக்க கணிப்பை உயர்த்தவும், ஜிடிபி வளர்ச்சி மதிப்பீட்டை சற்று குறைக்கவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
வட்டி விகிதம் மாறாமல் இருந்தாலும், கச்சா எண்ணெய் விலை - ரூபாய் மதிப்பு சரிவு பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது சாமானிய மக்கள் வாங்கும் அன்றாடப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும். இதனால் காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பாதிக்கப்படும்.
ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பணியை தான் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications