ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் தங்கம்.. வெறும் ஏழு நாளில் நடந்த வரலாற்றில் இல்லாத மாற்றம்
சென்னை: உலகச்சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயருகிறது. இதன் எதிரொலியாக இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு அதிரடியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தங்கத்தின் சர்வதேச விலை கடந்த சில வாரங்களில் நடந்த மாற்றத்தால், ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பு மதிப்பு ரூ.30 ஆயிரத்து 998 கோடி உயர்ந்து மொத்த தங்க கையிருப்பு மதிப்பு ரூ.9.07 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வட்டி விகிதம் குறைவாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாலும், மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் பதற்றங்களும், பல்வேறு நாட்டின் முதலீட்டாளர்களை தங்கத்தில் முதலீடு செய்ய தூண்டியிருக்கிறது. இதனால் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் புதிய உச்சம் ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் 3ம் வாரத்தில் 72 முதல் 74000 வரை இருந்த தங்கம், படிப்படியாக உயர தொடங்கியது. மின்னல் வேகத்தில் ஏறிய தங்கம் விலை, கடந்த 8-ந்தேதி ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னரும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போனது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் ஏற்பட்டது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600 என்ற உச்சத்தை எட்டியது. ஆனால் நேற்று அதிரடியாக தங்கம் விலை குறைந்தது.
நேற்று காலையில் கிராமுக்கு ரூ.250-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரமும் குறைந்தது. பின்னர் பிற்பகலில் விலை சற்று அதிகரித்திருந்தது. கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் உயர்ந்தது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.96 ஆயிரத்துக்கும் நேற்று தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே உலகச்சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதால், இந்திய ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டு நாணய கையிருப்பில் கணிசமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட கடந்த வார புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த வெளிநாட்டு நாணயக் கையிருப்பு ரூ 61.89 லட்சம் கோடியாகும். இது அதற்கு முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது மொத்த கையிருப்பு ரூ.25,580 கோடி அளவுக்கு குறைவு ஆகும். எனினும் தங்கக்கையிருப்பு மதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் சர்வதேச விலை உயர்வு காரணமாக, ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பின் மதிப்பு ரூ.30 ஆயிரத்து 998 கோடி உயர்ந்து மொத்த தங்க கையிருப்பு மதிப்பு ரூ.9.07 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தை ஒப்பிடும்போது ரூ.3.55 லட்சம் கோடி மதிப்பு உயர்ந்துள்ளது . இது அமெரிக்க டாலர் மதிப்பில், தங்கக் கையிருப்பு 102.36 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இது இந்திய வரலாற்றில் மிக உயர்ந்த நிலையாகும். ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயின் மதிப்பை தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. அதன் காரணமாக தங்கம் விலை ஏறும் போது மதிப்பும் ஏறுகிறது. ஒரு நாட்டின் நாணய மதிப்பை பாதுகாக்க, அந்த நாட்டின் மத்திய வங்கியில் உள்ள தங்க இருப்பு மறைமுகமாக உதவுகிறது. ஏனெனில் தங்கம் விலை ஏறும் போது, பாதிப்புகள் குறைந்து நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications