மக்களைக் காக்க 24 மணிநேரமும் தயார்.. எந்த நேரமும் புகார் தெரிவிக்கலாம் - கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மீண்டும் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 27.10 மி.மீட்டர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 271.68 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 10.11.2021 வரை 388.10 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 255.2 மி.மீட்டரை விட 52 சதவீதம் கூடுதல் ஆகும்.
தமிழ்நாட்டில் முக்கியமான 90 நீர்த்தேக்கங்களில், 53 நீர்த்தேக்கங்கள் 76 சதவீதத்திற்கு மேலாக நிரம்பியுள்ளன. 14,138 ஏரிகளில் 9,153 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலாக நிரம்பியுள்ளன, இவற்றுள் 3,691 ஏரிகள் 100 சதவீதத்திற்கு மேலாக நிரம்பியுள்ளன. மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வங்கக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 33,773 படகுகள் பத்திரமாக கரை சேர்ந்துள்ளன.

நிவாரண முகாம்கள்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 1,343 நபர்கள் 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 13,39,670 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கியுள்ள 400 பகுதிகளுள், 240 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 160 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

சுரங்கப்பாதைகளில் வெள்ளம்
மழை நீரால் சூழப்பட்டுள்ள 16 சுரங்கப்பாதைகளில், 15 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 1 சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. சாலைகளில் விழுந்த 116 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,265 மருத்துவ முகாம்கள் மூலம் 38,780 நபர்கள் பயனடைந்துள்ளனர். மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 46 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 யிசிஙி-களும், 325 ராட்சத பம்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 7,180 புகார்கள் வரப்பெற்று, 3,593 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3 பேர் உயிரிழப்பு
திருவாரூர், மதுரை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் இதுவரை 94 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாநகராட்சியோடு சேர்ந்து பணியாற்றுகின்றனர். கடலோர மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்புப்படை
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 3,670 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. பருவமழை காலத்தில், நோய் தொற்றை தவிர்க்கும் பொருட்டு 1,523 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 54,040 நபர்கள் பயனடைந்துள்ளனர். பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்பு படையின் எட்டு குழுக்கள், அதாவது கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி பகுதிக்கு மூன்று குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை மாநகராட்சி பகுதியில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்த, எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., வடக்கு வட்டாரத்திற்குடாக்டர் டி. கார்த்திகேயன், மத்திய வட்டாரத்திற்கு பங்கஜ் குமார் பன்சால், மற்றும் தெற்கு வட்டாரத்திற்கு டாக்டர் கே. கோபால், ஆகிய மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். தாம்பரம், சோழிங்கநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலரான திருமதி. அமுதா, இ.ஆப., நியமிக்கப்பட்டுள்ளார்.

தன்னார்வலர்களுக்கு பயிற்சி
பேரிடர் மேலாண்மையில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தும் வகையில், ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் குறைந்தபட்சம் 2 தன்னார்வலர்களை கண்டறிந்து, பயிற்சி அளித்து, சமுதாய அளவிலான மீட்புப் படையினை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளதன் அடிப்படையில், நீச்சல் தெரிந்தவர்கள் 19,547, மரம் அறுக்கத் தெரிந்தவர்கள் 15,912, பாம்பு பிடிப்பவர்கள் 3,117, கால்நடைகளின் பாதுகாப்பிற்காக 19,535 என சுமார் 1.05 இலட்சம் தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், முடிச்சூர், செம்பாக்கம், கோவிளம்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளும், 11 கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் பணிகளும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள நகராட்சி பகுதிகளில் வெள்ளத் தடுப்புப்பணிகளும் 513.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எந்த நேரமும் தயார்
சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications