"வாழ்ந்து கெட்ட ஜமீன்" டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்.. காரணம் என்ன?
சென்னை: டி20 உலகக்கோப்பையை வென்ற இரு சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ் அணி குரூப் சுற்றோடு வெளியேறியதற்கான காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
கிரிக்கெட் வரலாற்றில் ஆதிக்க சக்திகளாக திகழ்ந்த இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியாவையும் ஓடஓட விரட்டிய பெருமை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மட்டுமே இருந்தது. கறுப்பின அணி என்று இங்கிலாந்து மக்களால் விமர்சிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ், லார்ட்ஸ் மைதானத்திலேயே இங்கிலாந்தை வீழ்த்தி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தது. இது நடந்தது எல்லாம் 1970 முதல் 90 வரை.
தற்போது டி20 கிரிக்கெட் என்னும் புதிய வடிவம் இளைஞர்களை சூழ்ந்து கொண்டுள்ளது. டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களே ஜாம்பவான்கள். 2008ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில், இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வருவது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான். இயற்கையாகவே அசாத்திய வலிமை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு சிக்சர் அடிப்பதெல்லாம் சிங்கள் அடிப்பது போல்.

இருமுறை சாம்பியன்
அதற்கேற்ப இரு முறை டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியும் சாதனை படைத்திருக்கிறார்கள். 50 ஓவர் உலகக்கோப்பை, டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படியோ, ஆனால் டி20 கிரிக்கெட் என்று வந்துவிட்டால் வெஸ்ட் இண்டீஸின் ஆட்டம் அசாத்தியமாகவே இருந்துள்ளது. இவ்வளவு ஏன், கிரிக்கெட் போர்டின் எதிர்ப்பையும் மீறி ஜெர்ஸியை சொந்த பணத்தில் அடித்து உலகக்கோப்பையை வென்ற வரலாறு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மட்டுமே உள்ளது.

முதல் சர்ச்சை
அதனால் டி20 உலகக்கோப்பை தொடங்கிய போது வெஸ்ட் இண்டீஸ் அணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதேபோல் சின்ன பயமும் இருந்தது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி 400 ரன்களும் அடிக்கும், 40 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகும். அதுதான் அந்த அணியின் ஸ்பெஷல். ஆனால் தொடங்குவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி விமானம் ஏறியது முதலே சர்ச்சை அதிகமாகியது.

அடுத்தடுத்து தோல்வி
அந்த அணியின் முன்னணி வீரரான ஹெட்மயர் விமானத்தை தவறவிட்டதால், அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். ஏற்கனவே பொலார்ட்டின் ஓய்வு, ரஸல், சுனில் நரைன் ஆகியோர் இல்லாமல் புதிய கேப்டனான நிக்கோலஸ் பூரன் தலைமையில் களமிறங்கியது. ஆஸ்திரேலிய ஆடுகளம், போதிய அனுபவமின்மை, பொறுப்பின்மை ஆகிய காரணங்களால் முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்
தொடர்ந்து ஜிம்பாப்வே அணியை வீழ்த்தினாலும், இன்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பரிதாபமாக தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்த டி20 உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பரிதாபமாக வெளியேறியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி
விதவிதமான வேகப்பந்துவீச்சாளர்கள் குழு, நம்பிக்கையான ஒரு இடதுகை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் ஆல்ரவுண்டர், ஷார்ட் பால் வீக்னஸ் இல்லாத பேட்ஸ்மேன்கள், பவர் ஹிட்டர்கள், அசாத்தியமான ஃபீல்டர்கள் என்று டி20 அணிக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் வெஸ்ட் இண்டீஸ் அணி வைத்துள்ளது. இருந்தும் தோல்வியடைவதை தான் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வாழ்ந்து கெட்ட ஜமீன்
கடைசி வரை என்ன திட்டத்தோடு இந்த உலகக்கோப்பை அணுகினார்கள் என்பதே யாருக்கும் தெரியவில்லை. களத்தில் இறங்கி ஆடினால் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என அத்தனை அணிகளையும் அசால்ட்டாக வீழ்த்தும் வல்லமை கொண்ட அணியாக பார்க்கப்பட்டது. ஆனால் மிஸ் மேனேஜ்மெண்ட், சரியான திட்டமிடுதல் இல்லாதது, அனுபவமின்மை, வியூகத்தில் ஏற்பட்ட கோளாறால், 2 முறை சாம்பியன் அணி வாழ்ந்து கெட்ட ஜமீனாக குரூப் சுற்றோடு வெளியேறியுள்ளது.

அடுத்த உலகக்கோப்பை?
அதேபோல் பாப்பாரப்பட்டியில் ஒரு டி20 கிரிக்கெட் தொடரை நடத்தினால் கூட வெஸ்ட் இண்டீஸின் அனைத்து வீரர்களும் பங்கேற்க தயாராக உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அணியின் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்றால், அடுத்த டி20 உலகக்கோப்பையில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவவும் வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications