Weather: செம ஹீட்டு.. நாளையும் வெயில் தாறுமாறா அடிக்கப்போகுதாம்.. வெதர்மேன் அப்டேட்!
சென்னை: தமிழ்நாட்டின் பல இடங்களில் இன்று (நவம்பர் 2) அதிக வெப்பநிலை பதிவானது. நாளை (திங்கட்கிழமை) மற்றொரு வெப்பமான நாளாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அக்டோபரில் மழை கொட்டிய நிலையில், நவம்பரில் வெயில் வாட்டி வருகிறது.
வழக்கமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்க வேண்டிய நவம்பர் மாதத் தொடக்கத்திலேயே தமிழ்நாட்டில் வெப்பநிலை நேர்மாறாக உயர்ந்து காணப்படுகிறது. காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றமே இந்த அதிக வெப்பத்திற்குக் காரணம் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதத்தில் இந்த அளவு வெப்பம் நிலவியது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இன்று (நவம்பர் 2) சென்னையில் அதிகபட்சமாக 35.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இது நவம்பரின் 2வது வெப்பமான நாளாகும். முன்னதாக நேற்று சென்னையில் 35.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இன்று அதிகபட்சமாக மதுரையில் 37.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
நுங்கம்பாக்கத்தில் நேற்று (01-11-2025) 35.5 டிகிரி என அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் இரண்டாவது அதிகபட்ச வெப்பமாக 35.4 டிகிரி நேற்று பதிவாகியிருக்கிறது. வேலூர் இரண்டாவது அதிகபட்ச வெப்பமாக 35.6 டிகிரியும், மதுரை விமான நிலையத்தில் இரண்டாவது அதிகபட்ச வெப்பமாக 37 டிகிரியும், மதுரை மாநகரில் மூன்றாவது அதிகபட்ச வெப்பமாக 36.4 டிகிரியும் பதிவாகி உள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் இன்று 35.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. நாகப்பட்டினத்தில் இன்று 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கடந்த பல ஆண்டுகளில் நவம்பர் 2 ஆம் தேதி பதிவான வெப்பநிலைகளில் இன்று மிக அதிகம் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பல வானிலை ஆய்வு மையங்களில் வெப்பநிலையில் மற்றொரு சாதனை நாள் இன்று. நாளை தமிழகத்திற்கு மற்றொரு வெப்பமான நாள் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சிறிது இடைவெளிக்குப் பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் மாலையில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்குகிறது.
நாளை வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார். மற்ற இடங்களில் நாளை வறண்ட வானிலையே காணப்படும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை சீசன் ஏற்கனவே தொடங்கிய நிலையில் தமிழகத்திற்கு கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் 171.9 மில்லிமீட்டர் அளவிற்கே சராசரி மழை பெய்யும் சூழலில் இம்முறை 233.9 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அதாவது, வழக்கத்தை விட 36 சதவீதம் அதிகமாக கொட்டி தீர்த்துள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்துள்ளது. தற்போது நவம்பரில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இயல்பை விட குறைவான மழைக்கு தான் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications