டெல்லியில் கைதான பெலிக்ஸ் ஜெரால்டு..எங்கே இருக்கிறார்? உயிருக்கு ஆபத்து.. கண்ணீருடன் மனைவி வீடியோ!
சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் ரெட்பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இன்னும் தமிழ்நாடு அழைத்து வரப்படாததால் அவருக்கு அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மனைவி கண்ணீருடன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து அவர் மீது வழக்குகள் பாய்ந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் கைது: சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஃபெலிக்ஸ் ஜெரால்டு: மேலும் நேற்று சவுக்கு சங்கரின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கஞ்சா, பணம், லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியிருந்தனர். இந்த நிலையில் சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
நீதிபதி கண்டனம்: காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என முன் ஜாமின் கேட்டு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி குமரேஷ் பாபு கடும் கண்டனங்களை தெரிவித்தார். மேலும் யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற தூண்டும் விதமாக நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார்.
டெல்லியில் கைது: மேலும் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனு மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தது என்று ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் இருப்பதாக நாடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. நொய்டாவில் அறை ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அவரை நேற்று அதிகாலையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மனைவி கண்ணீர்: இதுதொடர்பாக பேசியுள்ள அவர் மனைவி,"கடந்த பத்தாம் தேதி இரவு 11:20 அவருக்கு அலைபேசி மூலம் பலமுறை அழைத்தபோது அவர் எடுக்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் எடுத்து, தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதையடுத்து அருகில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் போனை கொடுத்தார். அவரிடம் எதற்காக எனது கணவரை கைது செய்திருக்கிறீர்கள் எப்போது ஊருக்கு கொண்டு வருவீர்கள்? என்று கேட்டபோது இரவு ரயிலில் வர முடியாது, அதனால் மறுநாள் காலையில் ரயிலில் அவரை திருச்சிக்கு கொண்டு வருவதாக என்னிடம் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்து: மறுநாள் காலையில் தொடர்பு கொண்டபோது காலையில் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். அதன் பின்னர் பலமுறை அழைத்தும் அவர்கள் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை. எனது கணவரை எங்கே வைத்திருக்கிறார்கள்?, எங்கே கொண்டு செல்கிறார்கள்?. என்னச் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. சவுக்கு சங்கரைப் போல எனது கணவரின் உயிருக்கும் போலீஸாரால் ஆபத்து ஏற்பட்டுள்ளது" என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications