இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மோகம்.. சென்னை எண்ணூரில் '2கே' கிட்ஸ் நடத்திய வீடியோ ஷுட்.. பெரும் சோகம்
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 19 வயது இளைஞர், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுக்க ஆசைப்பட்டு குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். அப்போது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் இன்றைய 2கே கிட்ஸ்களை பாடாய் படுத்துகிறது.. வெறும் லைக் மற்றும் ஷேருக்காக வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். யூடியூப்பில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம்.. பேஸ்புக்கில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு பாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரன் ஆக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள்.

அதேநேரம் சிலர் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட ஆரம்பித்து இன்று அதை முழுநேர வேலையாக செய்கிறார்கள்.. இதனால் அவர்களுக்கு வருமானம் எல்லாம் வராது. வாழ்க்கை தான் போகிறது. இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் லைக் ஷேருக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைக்கும் கூட்டமாக பல 2கே கிட்ஸ்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த சம்பவத்தை கேட்ட பின்னராவது திருந்துவது நல்லது.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 19 வயது இளைஞர், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுக்க ஆசைப்பட்டு குட்டையில் தவறி விழுந்து பலியாகி உள்ளார். சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 19 வயதாகும் கிரண்ராஜ் , அந்த பகுதியில் ஐ.டி.ஐ. படித்து விட்டு வெல்டிங் வேலை செய்து வந்தார்.
இளைஞர் கிரண்ராஜ், சமூகவலைத்தளமான 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் அதிகப்படியான வீடியோ மற்றும் ரீல்ஸ் வெளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் விதவிதமான புகைப்படம், வீடியோக்களை எடுத்து 'இன்ஸ்டாகிராமில்' தினமும் பதிவிட்டு வந்தார்.
இந்தநிலையில் கிரண்ராஜ், நேற்று காலை தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து எர்ணாவூர் குப்பம் அருகில் புதர்மண்டி கிடக்கும் பகுதியில் உள்ள குட்டை அருகே 'இன்ஸ்டாகிராமில்' பதிவிட 'வீடியோ ஷூட்' நடத்துவதற்கு போயிருக்கிறார்
அந்த இடம் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இருந்து வரும் சுடுநீர் கடலுக்கு செல்ல பயன்படுத்தப்பட்ட பாதை ஆகும். ஆனால் அந்த பாதை பயன்பாடு இல்லாமல் இருப்பதால், அதில் கழிவுநீர், மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி குட்டைபோல் மாறி உள்ளது. அங்கு சென்ற கிரண்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உற்சாகமாக புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளார்கள்.
அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர், அந்த இடம் மிகவும் ஆபத்தான பகுதி என்றும் அனைவரையும் அங்கிருந்து செல்லும் படி எச்சரித்துள்ளார். இதனால் பயந்துபோன இளைஞர்கள் அனைவரும் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். எண்ணூர் விரைவு சாலைக்கு வந்த போது, அவரது நண்பனான கிரண்ராஜ் அங்கு இல்லை என்பது தெரிந்தது.
இதையடுத்து மீண்டும் 'வீடியோ ஷூட்' நடத்திய பகுதிக்கு சென்று பார்த்துள்ளார்கள் அங்கு குட்டையில் கிரண்ராஜ் பிணமாக மிதப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார், கிரண்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்தனர். நண்பர்கள் அனைவரும் அந்த பகுதியில் இருந்து அவசர அவசரமாக வெளியே ஓடிய போது, கிரண்ராஜ் குட்டையில் தவறி விழுந்துள்ளார். ஆனால் இதனை கவனிக்காமல் நண்பர்கள் அங்கிருந்து வந்துவிட்டதால் கிரண்ராஜ், குட்டை நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications