Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாய்ப் பத்திரம்.. சொத்து அசல் ஆவணம்.. 77A/77B ரத்து? அப்பீலுக்கு போன பதிவுத்துறை.. ஆதரவு தந்த பெயிரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவு சட்ட பிரிவு 77A/77B-யினை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பதிவுத்துறை சார்பில் மேல் முறையீடு செய்துள்ள வழக்கிற்கு ஆதரவு தெரிவித்து பதிவுத்துறை தலைவருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

பெயிரா தலைவர் ஹென்றி எழுதியிருக்கும் அந்த கடிதத்தில், "தமிழ்நாடு பதிவுத்துறை ஆகச்சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு செயல்பாடுகள் அனைத்தும் ஸ்டார் 1.0 ஸ்டார் 2.0 என்கின்ற மென்பொருள் மூலம் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

Mother documents Registration Department Property Original Deeds

எங்கிருந்தும் எந்நேரத்திலும் ஒற்றை சாளர முறையில் (single window system) ஆவண முன் பதிவுகளை விரைந்தும், எளிமையாகவும், பாதுகாப்பாகவும் பணிகளை இணையதளத்தின் வாயிலாக மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறதென்றால் அது மிகையாகாது. மேலும் கூடுதல் சிறப்பாக ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதென்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

தமிழக அரசு பதிவுத்துறை

தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதிவு செய்வதை தடுக்கும் நோக்கோடு பல்வேறு காலகட்டங்களில் பல கிடுக்குப்பிடி சட்டங்களை கொண்டு வந்து தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பொதுமக்கள் ஆவணங்களை பதிவு செய்யும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை வகுத்து செயல்படுத்தி வருகின்றது.

அதுமட்டுமல்லாமல் போலி ஆவணம் தயாரிக்கும் ஆவண எழுத்தர் மற்றும் பதிவு செய்யும் சார் பதிவாளர்கள் மீது பதிவு சட்டப்பிரிவு 22A மற்றும் 22B மூலம் குற்ற நடவடிக்கை மேற்கொண்டு மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கும் சட்டமும் நடைமுறையில் உள்ளது.

சொத்து பரிவர்த்தனைகள்

தமிழகத்தில் சொத்துக்களை வாங்குபவர் மற்றும் விற்பவர்களிடையே வெளிப்படை மற்றும் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் விதமாக கடந்த 2013ஆம் ஆண்டு சொத்து பரிவர்த்தனைகள் சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையிலான வில்லங்கச் சான்று இணையதளம் வாயிலாக இலவசமாக பார்வையிடவும் மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

போலி ஆவணங்களை தடுக்கும் பொருட்டு பதிவுத்துறையினால் பல சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்தாலும், பதிவுத்துறையில் பணிபுரியும் ஒரு சிலர், ஆள்மாறாட்டம் மூலமாக போலி ஆவணங்களை மோசடியாக பதிவு செய்து சொத்துக்களை விற்பனை செய்து வந்தனர். மேற்கண்ட வகையில் பாதிக்கப்பட்ட சொத்தின் உண்மையான உரிமையாளர்கள் தங்களின் சொத்துக்களை திரும்ப பெறுவதற்கான தீர்வினை வேண்டி பதிவுத்துறை தலைவருக்கு வேண்டுகோள் வைத்து புகார் மனுக்களை அனுப்பி வைத்தனர்.

வழிகாட்டி நெறிமுறைகள்

மேற்கண்ட வகையில் போலி ஆவணங்கள் பதிவு செய்வதை தடுக்கும் நோக்குடன், இதற்கு தீர்வு காணும் பொருட்டு போலி ஆவணங்களை ரத்து செய்யும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் கடந்த செப்டம்பர் 21,2022 அன்று சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டு, உரிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்ட பிரிவு 77A மற்றும் பிரிவு 77B ஆகிய 2 உட்பிரிவுகளை தமிழக அரசு சேர்த்தது.

இச்சட்டப்பிரிவின்படி போலியான மற்றும் தவறான சொத்து பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தால், அவர் விசாரித்து, குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி ரத்து செய்யலாம் என மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி நடைமுறைப்படுத்தியது. இதன்மூலம் தங்களது சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் இழந்த ஏழை, எளிய மக்களுக்கு பத்திரப்பதிவு சட்டப்பிரிவு.77A/77B மிகப் பயனுள்ளதாக இருந்தது. பதிவுத்துறையின் இத்தகைய சிறப்புமிக்க சட்டப்பிரிவு.77A/77B-யை பெயிரா கூட்டமைப்பு வரவேற்று தனது ஆதரவினை தெரிவித்தது.

போலி ஆவணங்கள்

பத்திரப்பதிவு சட்ட பிரிவு 77A பிரிவில் குறிப்பிட்டுள்ள படி போலி ஆவணங்கள் மூலம் பாதிக்கப்பட்ட நபர் பதிவுத்துறையில் புகார் அளிப்பதன் மூலம் அதற்குரிய விசாரணை நடைபெற்று சம்பந்தப்பட்ட நபரின் ஆவணங்களின் உண்மைத் தன்மை சரிபார்க்கப்பட்டு போலி ஆவணங்கள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், மாவட்ட பதிவாளரால் சம்பந்தப்பட்ட போலி ஆவணம் ரத்து செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் வில்லங்கச் சான்றில் ஆவண சம்பந்தப்பட்ட போலி தகவல்கள் நீக்கப்பட்டு சொத்து சம்பந்தப்பட்ட அசல் உரிமையாளரின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேற்கண்ட சட்டத்தின் மூலம் சாமானிய மக்களுக்கு விரைந்து தீர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

கூடுதல் சிறப்பாக பத்திரப்பதிவு சட்ட பிரிவு 77A-யின் படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட நபருக்கு நம்பிக்கை மற்றும் உடன்பாடு இல்லாத பட்சத்தில் பத்திரப்பதிவு சட்ட பிரிவு 77B யில் குறிப்பிட்டுள்ள படி இறுதியாக பதிவுத்துறை தலைவர் அவர்களிடம் மேல் முறையீடு செய்து அதற்குரிய தீர்வினை காணும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.

பத்திரப்பதிவு சட்டப்பிரிவு

மேற்கண்ட வகையில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பத்திரப்பதிவு சட்ட பிரிவு 77A / 77B ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கிடைக்கப் பெற்ற தீர்வு திருப்தி அளிக்காத பட்சத்தில் நீதிமன்றங்களை அணுகி அதற்குரிய தீர்வினை காணும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.

போலி ஆவணங்கள் மூலம் தங்கள் சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களின் உதவியை நாடி அணுகும் பட்சத்தில், இது சம்பந்தமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு அதற்குரிய தீர்வு கிடைக்க பெறுவதற்கு பல தலைமுறைகள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் ஏழை, எளிய மக்கள் நீதிமன்றங்களை அணுகி சட்டப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதென்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல அவர்களின் வாழ்வியல் சூழலும் தடையாக உள்ளது.

மாவட்ட பதிவாளர்கள்

இந்நிலையில் பத்திரப்பதிவு சட்ட பிரிவு 77A/77B-யினால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என ஒரு சிலர் இச்சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மாவட்ட பதிவாளருக்கு போலி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை என தீர்ப்பு வழங்கி இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

பிறகு கடந்த 02.08.2024 அன்று இச்சட்டத்தை முழுமையாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற பத்திரப்பதிவு சட்ட பிரிவு 77A/77B-யை ரத்து செய்து வழங்கிய தீர்பபினை எதிர்த்து பதிவுத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு

பதிவுத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதை பெயிரா கூட்டமைப்பு பாராட்டி வரவேற்பதுடன் இவ்வழக்கில் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் பொதுவாக புதிய சட்டங்கள் இயற்றப்படும் போது அதில் சாதக பாதகங்கள் இருப்பது இயல்புதான்.

சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்போது தான் அதில் உள்ள நிறை, குறைகள் கவனத்திற்கு வரும். ஆகவே இச்சட்டத்தில் உள்ள குறை நிறைகளை கவனத்தில் கொண்டு அவைகளை களைவதற்கும் சரி செய்து செம்மைபடுத்தி சீர்படுத்தி அதற்குரிய திருத்தங்கள் மற்றும் பல புதிய ஷரத்துகளை சேர்க்கவும் மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பெயிரா கூட்டமைப்பின் சார்பாக பரிந்துரைக்கிறது.

அப்பீலுக்கு ஆதரவு

மேலும் பத்திரப்பதிவு சட்ட பிரிவு 77A/77B-யினை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள வழக்கிற்கு பெயிரா கூட்டமைப்பு தனது ஆதரவினை தெரிவித்து கொள்வதுடன், மேற்கண்ட மேல்முறையீட்டில் தங்களையும் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கிற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து இணைந்து செயல்பட வேண்டும்' என்று கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+