டிவி சேனல்களை பார்த்துதான் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கியது தெரிய வந்தது.. உறவினர் பேட்டி
சென்னை: பாகிஸ்தான் ராணுவத்தால் அபிநந்தன் கைது செய்யப்பட்ட விவகாரம் டிவி சேனலை பார்த்த பிறகுதான் தெரியவந்தது என்று அவரது உறவினர் பேட்டியளித்துள்ளார்.
இந்திய விமானி அபிநந்தன் இன்று, பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் எல்லையில் இன்று காலை, இந்திய விமானம் தொழில்நுட்ப கோளாறால் நொறுங்கி விழுந்த போது பாராசூட்டில் குதித்துள்ளார் அபிநந்தன்.

அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது. இதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டு உள்ளது. இருப்பினும் அவரது பெயர் அபிநந்தன்தானா என்பதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
அதே நேரம் இந்தியாவை சேர்ந்த ஒரே ஒரு பைலட் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய உள்ளதாக மட்டும் கூறியுள்ளது.
இதனிடையே அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த அவரது உறவினர் குந்தநாதன், இதுகுறித்து நிருபர்களிடம் பேசும்போது, "அபிநந்தன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை வீடியோ மூலமாக நாங்கள் தெரிந்து கொள்கிறோம். ஆனால் இந்திய அரசு சார்பில் இதுவரை எங்களிடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கூறப்படவில்லை. தொலைக்காட்சி செய்தி மூலமாகத்தான் இதை நாங்கள் அறிந்து கொண்டோம். அவரை விரைவில் மீட்டு வருவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
