“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!
சென்னை: "வெளிப்படைத்தன்மை பற்றி முழங்கும் முதல்வர் விஜய், மூடப்பட்ட மதுக்கடைகளின் முகவரியுடன் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட இவ்வளவு தயங்குவது ஏன்? காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா முதலமைச்சர் விஜய்?" என பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,765 சில்லறை கடைகள் வாயிலாக, மது பானங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை இரு வாரங்களுக்குள் மூட, கடந்த மாதம் 12 ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார். அதற்கு ஏற்ப, அந்த கடைகளும் சமீபத்தில் மூடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எத்தனை? அவற்றில் பள்ளி, கல்லூரிகளின் அருகிருந்த கடைகள் எத்தனை? அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன? போன்ற தகவல்களை சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்.டி.ஐ மூலம் டாஸ்மாக் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு டாஸ்மாக் நிறுவனம் அளித்த பதில் ஷாக் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன? என்ற கேள்விக்கு கோப்பு நிலுவையில் உள்ளது தகவல் வழங்க இயலாது" என டாஸ்மாக் நிறுவனம் பதில் கூறியிருக்கிறது.
பள்ளி, கல்லூரி, கோவில்களின் அருகே எத்தனை கடைகள் கண்டறியப்பட்டன? அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டன அந்த கடைகளுடைய நம்பர் என்ன? அந்தக் கடைகளில் எத்தனை பணியாளர்கள் பணியில் இருந்தனர்? அவர்களுக்கு எங்கே மாற்றுப்பணி வழங்கப்பட்டிருக்கிறது? என்ற தகவல்களையும் அவர் கேட்டிருந்தார்.
டாஸ்மாக் நிறுவனம், 'கேள்வி 1 க்கு கூறிய பதிலே இதற்கும் பொருந்தும்' என்கிற பதிலையே அத்தனை கேள்விகளுக்கும் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை பற்றிய விவரங்களை தராமல் இதுபோன்ற வினோத பதிலை தந்தது ஏன் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா முதலமைச்சர் விஜய்?
தகவல் அறியும் உரிமையிலும் பட்டியலைத் தராமல் கோப்பு நிலுவையில் உள்ளது என ஒளிந்துகொள்கிறது த.வெ.க அரசு. வெளிப்படைத்தன்மை பற்றி முழங்கும் முதல்வர் விஜய், மூடப்பட்ட மதுக்கடைகளின் முழு முகவரியுடன் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட இவ்வளவு தயங்குவது ஏன்?
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், உடனடியாகப் பட்டியலை வெளியிடுக!" எனத் தெரிவித்துள்ளார் எஸ்.ஜி.சூர்யா.












Click it and Unblock the Notifications