சென்னையில் உள்ள பிரபல கார் தொழிற்சாலையில் நடந்த மேஜர் மாற்றம்.. பவரை காட்ட போகும் ரெனால்ட்! ஆஹா
சென்னை: சென்னை ஒரகடத்தில் அமைந்துள்ள ரெனால்ட் நிசான் நிறுவன உற்பத்தி ஆலையின் மொத்த உரிமையும் ரெனால்ட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 640 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாகும். சென்னை ஆலையின் முழு உரிமையை கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியாவில் எங்கள் வளர்ச்சியை விரைவுபடுத்துவோம் என்று ரெனால்ட் நிறுவனம் கூறியுள்ளது.
கார் உற்பத்தி சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று ரெனால்ட் நிசான். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும் ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனமும் இணைந்து, கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த ஒரகடத்தில் தனது உற்பத்தி ஆலையை நிறுவியது. இந்த ஆலை ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.

ரெனால்ட் நிசான் நிறுவனம்
610 ஏக்கர் பரப்பளவில் இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலை உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிறுவனம் இயங்கி வரும் நிலையில், சமீபத்தில் இந்த நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற போவதாக தகவல் வெளியானது. விற்பனையில் சரிவு, கார்களுக்கு வரவேற்பு இல்லாதது ஆகியவை காரணமாக இந்திய சந்தைகளில் இருந்து வெளியேற போவதாக தகவல் வெளியான நிலையில் அதனை ஆலை நிர்வாகம் மறுத்தது.
51 சதவீத பங்குகள்
இந்த நிலையில்தான், தற்போது ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்திய பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள நிசானின் பங்குகளை ரெனால்ட் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டு நிறுவனத்தில் நிசான் நிறுவனத்திடம் 51 சதவீத பங்குகள் உள்ள நிலையில், அவற்றை ரெனால்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் சென்னையில் உள்ள ஆலையின் தனி உரிமையாளராக ரெனால்ட் மாறியுள்ளது.
சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவை மிக முக்கிய தூணாக மாற்றும் லட்சியத்தை இந்த முடிவு மேலும் வலுவாக்க கூடியதாக இருக்கும் என்று ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஸ்டீபன் டேப்லைஸ் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். ரெனால்ட் நிறுவனத்திற்கு தற்போது நாடு முழுவதும் சுமார் 350 விற்பனை மையங்களும் 450 சர்வீஸ் பாயிண்ட்களும் உள்ளன.
நிசான் நிறுவனம் வெளியேறுகிறதா?
இந்த கையகப்படுத்துதலுக்குப் பிறகும் நிசான் இந்தியாவில் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் ரெனால்ட்டின் துணை நிறுவனமாக செயல்படும். ஒரகடத்தில் உள்ள ஆலை திட்டமிட்டபடி நிசான் மாடல்களையும் தொடர்ந்து உற்பத்தி செய்யும்.
மேலும், ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ரெனால்ட் நிசான் டெக்னாலஜி & பிசினஸ் சென்டர் இந்தியா (RNTBCI) நிறுவனத்தை தொடர்ந்து நடத்தும்.
இதில் நிசான் தனது 49 சதவீத பங்குகளையும், ரெனால்ட் குழுமம் தனது 51 சதவீத பங்குகளையும் தக்கவைத்துக் கொள்ளும். தற்போதைக்கு, நிசான் இந்திய சந்தைக்கான தனது திட்டமிடப்பட்ட எதிர்கால மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தும். நிசான் குழுமத்திடம் இருந்து பங்குகளை கையகப்படுத்தியது குறித்து ரெனால்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சுவா ப்ரோவோஸ்ட் கூறியதாவது:-
அனைத்து வசதிகளும் உள்ளன
"இந்தியா ரெனால்ட் குழுமத்திற்கு ஒரு முக்கிய சந்தை. கடந்த 14 ஆண்டுகளாக, எங்கள் அர்ப்பணிப்புள்ள குழுக்கள் மற்றும் கூட்டாளர்களின் உதவியுடன் ரெனால்ட் பிராண்டை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளோம். இதன் மூலம் ஆண்டுக்கு 100,000 க்கும் மேற்பட்ட வாகன விற்பனையை எட்டியுள்ளோம். சென்னை ஆலையின் முழு உரிமையுடன், இந்தியாவில் எங்கள் வளர்ச்சியை விரைவுபடுத்த இப்போது எங்களிடம் அனைத்து வசதிகளும் உள்ளன" என்றார்.












Click it and Unblock the Notifications