வேலை வெட்டி இல்லீங்க! உலக அளவில் 74%? மோடி ஆட்சியில் ‘இந்தியா’வின் நிலை! அதிர்ச்சி தகவல்!
சென்னை: உலகில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களில் 70% பேர் இந்தியாவில்தான் உள்ளனர் என்று ஒரு அறிக்கை சொல்லி இருக்கிறது. ராமர் கோயிலை வைத்து பொய்களைப் பரப்பி வரும் பிரதமர் மோடி இதைப் பற்றிப் பேசுவாரா என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் மோடி ராமர் கோயிலைக் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடித்துவிடும் என்று பேசிய விவகாரம் நாடு முழுவதும் கடும் விமர்சனத்தைக் கிளப்பி இருக்கிறது. அவரது வெறுப்பு பிரச்சாரம் குறித்துத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை. மிகப் பெரிய அமைதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.
இந்த அமைதி பற்றியும் பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சாரம் குறித்து முன்னாள் தேர்தல் அதிகாரியும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பாலச்சந்திரன் மிக வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
மோடியின் பேச்சு குறித்து பாலச்சந்திரன், "பிரதமர் மோடி ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் என்பது நாட்டில் உள்ள எல்லோருக்குமே தெரிகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு மட்டும் அது இன்னும் தெரியவே இல்லை.
உத்தரப் பிரதேச தேர்தல் பரப்புரையில் 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை புல்டவுசர் வைத்து இடித்துவிடுவார்கள்' என்று பேசி இருக்கிறார்.
இதை எந்த ஆதாரத்தை வைத்துச் சொல்கிறார் பிரதமர்? தமிழ்நாட்டில் சமாஜ்வாடி கட்சி இருக்கிறது என்கிறார். அந்தக் கட்சி தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது? எனக்கு மோடி மீது உள்ள பயத்தைவிட, தேர்தல் ஆணையத்தின் மீது உள்ள பயம்தான் அதிகம் உள்ளது.

இதுவரை எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது. நான் மாவட்ட தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பு வகித்திருக்கிறேன். தேர்தல் கால நடைமுறை விதிகள் என்று ஒன்று உள்ளது.
அதன்படி மத உணர்வுகளைத் தூண்டுவது மாதிரியோ, பிற சமூகத்தினரை இழிவுபடுத்துவதைப் போலவே பேசவே கூடாது. அது சட்டப்படி குற்றம்.
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலை இடித்துவிடுவார்கள் என்பது ஒரு தரப்பு மதத்தினரைத் தூண்டிவிடுவதாகத்தான் அர்த்தம். அது தேர்தல் விதிக்குப் புறம்பானது. சட்டப்படி இது குற்றம். தண்டனைக்கு உரியது.
ராமர் கோயில் விவகாரத்தை உபியில் பேசுகிறார். ம.பியில் கிளப்பி விடுகிறார் மோடி. ஏனென்றால், அங்குதான் ராமரை வைத்து அரசியல் செய்ய முடியும். அந்த மாநில மக்களுக்கு ராமர் மீது அதிக பக்தி இருக்கிறது. அந்த வாக்குகளைக் கவர்வதற்காக மோடி இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

ராமர் கோயிலைப் பற்றி முன்னுக்குப் பின் முரணான செய்திகளைச் சொன்னால், அது மக்களைக் கோபத்தைக் கிளப்பும் என்று மோடி நம்புகிறார். அதனால் இப்படிப் பொய்யான தகவல்களைச் சொல்கிறார்.
ஒருவேளை இப்படி மத துவேஷ கருத்துகளைச் சொன்னால், ஓட்டுக்கள் பாஜகவுக்கு வரும் என்று ஏதாவது ரகசிய சர்வேவை பாஜக எடுத்துள்ளதா? அதற்காக இப்படிப் பேசுகிறாரா மோடி? இப்படிப் பல சந்தேகங்கள் வருகின்றன.
ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு ஒரு சந்தேகமும் வரவில்லை. அது இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக ராகுல் காந்தி மீது புகார் வந்துள்ளதாகச் சொல்லி, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். யார் பேசினார்களோ அவர்களுக்குத்தான் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்? ஏன் கட்சி அலுவலகத்திற்கு அனுப்புகிறார்கள்?
உரிய முறையில் தண்டனை வழங்குவதாக யார் பேசினார்களோ அவர்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். சின்ன அளவு தண்டனை என்றால், இரண்டு நாள்கள் பிரச்சாரத்திற்குத் தடை விதிப்பார்கள் அவ்வளவுதான்.
பெரிய நடவடிக்கை என்றால், தேர்தல் முடியும்வரை பேசக்கூடாது என்பார்கள். மிகப்பெரிய தண்டனை என்றால், 6 ஆண்டுகள் அவரை தேர்தலில் நிற்கத் தடை விதிப்பார்கள்.

இதுமாதிரி பால் தாக்ரேவுக்கு ஒருமுறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதமரிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் தயங்குகிறது. மோடிக்குப் பயப்படுகிறதா என்ற சந்தேகம் கூட உள்ளது.
தமிழ்நாட்டில் வந்தால் கச்சத்தீவு பிரச்சினையைக் கிளப்பிவிடுகிறார் மோடி. அண்டை மாநிலத்திற்குப் போய் 'உங்கள் மாநிலத்தை நம்பர் 1 ஆக மாற்றுவோம்' என்கிறார்.
கச்சத்தீவு மீது உண்மையில் அக்கறை இருந்திருந்தால் பாஜக தேர்தல் அறிக்கையில் அதை மீட்போம் என்று சொல்லி இருக்க வேண்டுமா? வேண்டாமா? ஒரு விசயத்தை பாஜக கிளப்புகிறது. அதைப் பற்றி கேள்வி எழுப்பினார் அவர்களிடம் பதில் இல்லை.
2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றது பாஜக. கேஸ் விலையைக் குறைப்போம் என்றது பாஜக. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றது பாஜக. அதை எதையுமே செய்யவில்லையே என காங்கிரஸ் கேள்வி கேட்டால், பாஜகவிடம் பதில் இல்லை.
இவற்றை எல்லாம் மறைக்கத்தான் பாஜக மத அரசியலைச் செய்கிறது. மோடி பொய்யான தகவல்களைப் பேசுகிறார். நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ளது. அது மக்களும் தெரிகிறது. இண்டர்நேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் (International Labour Organization) ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
வேலை செய்வதற்காகத் திறமை இருந்தும் வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் உள்ளது என்று சொல்லி இருக்கிறது. கிட்டத்தட்ட 74% இருப்பதாகச் சொல்லி இருக்கிறது.
இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். இதைப் பேசுவாரா மோடி?" என்கிறார்












Click it and Unblock the Notifications