அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு.. முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை
சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறிய தகவல்களை பார்ப்போம்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் சாதிய மோதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். எல்லா தலைவரின் சிலைக்கும் கூண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அதை உடைக்க முடியாத கண்ணாடி பேழையில் வைக்க வலியுறுத்தினோம். தமிழகத்தில் தற்போது குற்றங்கள் குறைந்துள்ளன. சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டம் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கான கூட்டமாக அமைந்திருந்தது" என்றார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறினார். அது தற்போது நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.
பாதிக்கப்படும் மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது தொடர்ந்து வருகிறது. எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான குற்றங்களில் அதிகாரிகள் செயல்படுவது கவலை அளிக்கிறது. அதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் நாங்கள் தெரிவித்தோம். வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை வைத்தோம்" என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நாகைமாலி பேசுகையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்று 4 முறை இந்த கூட்டங்கள் நடந்து உள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக இந்தக் கூட்டம் நடத்தப்படவே இல்லை. தமிழ்நாட்டில் பரவலாக தீண்டாமை குற்றங்கள் நடந்து வருகின்றன. அதை ஒரு நாளில் தீர்க்க முடியாது. அரசு உறுதியாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்க இயலும்.
காவல் துறையினரிடம் சாதிய மனப்பான்மை இருக்கிறது.. இதனால் அரசின் நடவடிக்கைகளை வேகமாக செய்ய முடியவில்லை என்ற கருத்தை முதல்வரிடம் நாங்கள் பதிவு செய்தோம். தீண்டாமை குற்ற வழக்குகளை பெரும்பாலான இடங்களில் சில காவல்துறையினர் நீர்த்து போகச் செய்திருக்கிறார்கள். பட்டியலின அரசு ஊழியர் பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு குறித்து முதல்வரிடம் கூறினோம் என்றார்.
புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி கூறுகையில், தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து எஸ்.சி., எஸ்.டி. மக்கள் மீது நடத்தப்படும் கொலைகள், வன்கொடுமைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் சுட்டிக்காட்டி உள்ளோம். வேங்கைவயல் விவகாரத்தில் தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். பட்டியலின மக்கள் குறைவாக வாழ்கின்ற பகுதியில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications