வடசென்னைக்கு மட்டும் ஏன் இப்படி? ரயில்வே கேட்களால் தீவிரமாகும் போக்குவரத்து நெரிசல்!
சென்னை: தென் சென்னையில் எல்லா ரயில்வே கேட்களுக்கும் சுரங்கப்பாதையோ, மேம்பாலமோ அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், வடசென்னையில் மட்டும், இன்னமும் ரயில்வே கேட் முறை நீடித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் தீவிரமாக இருக்கிறது.
விம்கோ, ஐஓசி, கொருக்குப்பேட்டை என பல பகுதிகளில் ரயில்வே இருப்பு பாதையை கடக்க பாலங்களோ, சுரங்கப்பாதைகளோ கிடையாது. இதனால் அப்பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வடசென்னையின் தண்டையார்பேட்டை பகுதியிலிருந்து மணலிக்கு போகும் வழியில் ஐஓசி ரயில்வே கேட் இருக்கிறது. துறைமுகம் வழியாக கப்பலில் கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய் இங்குள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு பைப் மூலம் கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து எண்ணெய் சுத்தப்படுத்தப்பட்டு அது, பிற மாநிலங்களுக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரம் தொடங்கி 2 மணி வரை கூட பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். ஐஓசி பகுதியில் உள்ள குடியிருப்பில் திடீரென யாருக்கேனும் உடல்நலம் சரியில்லை எனில், உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். ஆனால், ரயில்வே கேட் மூடிவிட்டால் நோயாளியின் நிலை மோசமாகிவிடும்.

இந்த பாதைக்கு மாற்று வழி எனில், திருவொற்றியூரை சுற்றிக்கொண்டுதான் வர வேண்டும். இருக்கிற போக்குவரத்து நெரிசலில் திருவொற்றியூரில் நுழைந்தால் வெளியே வர நிச்சயம் 30 நிமிடங்கள் வரை ஆகும். அதன் பின்னர் காசிமேடு, மண்டபம் பகுதிகளை கடக்க 30 நிமிடங்கள் ஆகும். இறுதியாக ஸ்டான்லி வர 1-1.30 மணி நேரம் வரை ஆகும். ஆனால் மணலி ரோடு எனில் 20 நிமிடங்களில் வந்துவிடலாம்.
இங்குள்ள மக்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் இருப்பவர்கள் பலர் ஐஓசி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். எங்களுக்கு இது வாழ்வாதாரத்தை கொடுக்கிறது. ஆனால், இதே நிறுவனம் எங்களின் உயிருடனும் விளையாடுகிறது. சமீபத்தில் எங்கள் உறவினர் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த வழியாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் இடையில் கேட் போட்டதால் நீண்ட நேரம் தாமதமாகிவிட்டது. குழந்தை துடித்துவிட்டது. அதை எங்களால் மறக்கவே முடியாது.

நாங்கள் எவ்வளவோ கெஞ்சி பார்த்தோம். ஆனால், கேட் திறக்கப்படவே இல்லை. பொதுமக்களுக்கு மட்டுமல்ல, மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு போகும் ஐஓசி ஊழியர்களுக்காக கூட கேட்டை திறக்க மாட்டார்கள்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
ஐஓசி மட்டுமல்ல கொருக்குப்பேட்டையின் நிலையும் இதே போல்தான் இருக்கிறது. மகாராணி தியேட்டர் இருக்கும் பகுதியிலிருந்து மூலக்கடை, மாதவரம் போக வேண்டும் எனில் கொருக்குப்பேட்டை ரயில்வே கேட்டை கடக்க வேண்டும். ஆனால் இந்த ரயில்வே கேட்டை அவ்வளவு சுலபத்தில் திறக்க மாட்டார்கள். குறைந்தபட்சம் 30 நிமிடம் தொடங்கி அதிகபட்சம் 1.30 மணி நேரம் வரை கூட காத்திருக்க நேரலாம்.
இதை தவிர்த்து வேறு வழி எனில் பேசின் பாலத்தை கடந்து போக வேண்டும். மற்றொரு பாதை எனில் வைத்தியநாதன் பாலத்தை கடக்க வேண்டும். இரண்டுமே தலையை சுற்றி மூக்கை தொடும் கதைதான். அதிலும் வைத்தியநாதன் பாலத்தின் வழியாக வந்தால் எண்ணூர் ஹைரோடு வழியாக வந்து, தண்டையார்பேட்டை ரோட்டில் நுழைய வேண்டும். இங்கு இன்னொரு ரயில்வே கேட் இருக்கிறது. அதில் சிக்கினால் குறைந்தது 20 நிமிடங்கள் தாமதமாகும்.

இதே போலத்தான் திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையமும். திருவொற்றியூர் ஹை ரோட்டில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கிறது. இங்கிருந்து வருபவர்கள் ரயில்வே கேட்டை கடந்துதான் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் போக முடியும். ஆனால், ஒரு முறை கேட் போட்டுவிட்டால் மீண்டும் திறப்பதற்கு 30 நிமிடங்களாவது ஆகும். மாற்றுவழி எனில், அஜாக்ஸ் பழைய டிப்போ பகுதியில் மாணிக்கம் நகர் பகுதியில் இருக்கும் சுரங்க பாதைத்தான். அதுவும் நெரிசலாகத்தான் இருக்கும்.
எனவே வடசென்னை மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு, ரயில்வே கேட் இருக்கும் பகுதியில் மேம்பாலங்கள் அல்லது சுரங்கபாதையை அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications