மாயமான ஐஜி பொன் மாணிக்கவேலின் துப்பாக்கி! 8 தோட்டா வேற இருந்துச்சாம்..! ஓடும் ரயிலில் பரபர சம்பவம்.!
சென்னை : ரயில் பயணத்தின்போது 8 தோட்டாக்கள் நிரப்பப்பட்டு இருந்த பாதுகாப்புக்காக வைத்திருந்த தனது கைத்துப்பாக்கியை ஓய்வு பெற்ற காவல்துறை ஐஜி பொன்மாணிக்கவேல் தவற விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் சிலை கடத்தல் பிரிவு ஐஜியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டர். அவரது தலைமையிலான தனிப்படை தமிழகம் முழுவதும் தமிழ்நாட்டு கோயில்களின் புராதான சிலைகள், கலசங்கள் கடத்தல் வழக்கை விசாரித்தது.
அவர்களது அதிரடி நடவடிக்கையால் சிலை கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் முதல், தொழிலதிபர்கள் வரை பாரபட்சம் இல்லாமல் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பேசு பொருளானார் பொன் மாணிக்கவேல்.

ஐஜி பொன்.மாணிக்கவேல்
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டும் நவம்பர் 30ஆம் தேதி ஐஜி பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக அன்பு நியமிக்கப்பட்டார். கடந்த 3 வருடங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த அவர், தற்போது பள்ளிகள், மற்றும் ஒருசில தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவரது பெயர் செய்திகளில் இடம் பெற்றிருக்க்கிறது.

துப்பாக்கி மாயம்
ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து ஐஜி பொன் மாணிக்கவேல் ரயிலில் சென்றுள்ளார். அப்போது தனது பாதுகாப்புக்காக உரிமம் பெற்ற துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பி அதனை தன்னுடன் வைத்துள்ளார். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த அவர் ஈரோட்டில் இறங்கிச் சென்ற நிலையில் அவர் வைத்திருந்த தோட்டாக்கள் நிரப்பப்பட்டு இருந்த கைத்துப்பாக்கி மாயமானது பின்னர் தான் தெரிய வந்தது.

தோட்டக்காளுடன் மாயம்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் பொன்மாணிக்கவேல் பயணித்த ரயில் பெட்டியில் அவர் அமர்ந்திருந்த இருக்கையில் விட்டு தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று கேட்பாரற்று கிடந்த ரயில்வே பணியாளர்கள் பார்த்து அதனை எடுத்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போதுதான் அது பொன்மாணிக்கவேல் துப்பாக்கி என்பதும் அவர் ஏற்கனவே புகார் அளித்ததும் தெரியவந்தது.

துப்பாக்கி மீட்பு
இதையடுத்து அந்த துப்பாக்கியை கைபற்றிய போலீசார் ஐஜி பொன் மாணிக்கவேல் தொடர்பு கொண்டு அவரிடம் துப்பாக்கியை மீண்டும் ஒப்படைத்துள்ளனர். ஓடும் ரயிலில் ஐஜி பொன்மாணிக்கவேல் துப்பாக்கி தவற விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவேளை அந்த துப்பாக்கி வேறு யாரிடமாவது கிடைத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும் எனக்கூறும் சமூக ஆர்வலர்கள் உரிமங்கள் பெற்று துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை கவனமுடன் கையாள வேண்டும் எனக் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications