இந்துக்கள் ஆன்மீக பற்றை வெளிப்படுத்தக் கூடாது! ஜெய்ஸ்ரீராம் கூறிய நடிகை ரேவதி..நெட்டிசன்கள் கண்டனம்
சென்னை: மற்ற மதத்தினரின் நம்பிக்கைகளை காயப்படுத்தக் கூடாது என்பதால் இந்துக்களாகிய நாம் நம் நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என ராமர் கோயில் குறித்து நடிகை ரேவதி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
உத்தரப்பிரேதச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ரூ 2000 கோடியில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் நிலநடுக்கம் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 22 ஆம் தேதி திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
200 கிலோ எடை கொண்ட கல்லால் ஆன பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலைக்கு கண் திறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். வரலாற்று சிறப்பு வாய்ந்த அயோத்தி ராமர் கோயிலை வெற்றிகரமாக கட்டி முடித்ததற்கு பாஜக அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு சில எதிர்ப்புகளும் கிளம்பின. நடிகை பார்வதியும் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் 1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தில் இறையாண்மை, சமத்துவம், மதசார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு நாடாக இந்தியா எப்போது இருக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அவர் ஷேர் செய்த இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை பலரும் ஷேர் செய்தனர். இந்த நிலையில் நடிகை ரேவதியின் பதிவு பெரும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட தினத்தை மறக்கவே முடியாது.

அயோத்தி கோயிலுக்குள் குழந்தை ராமர் வருவதை பார்த்த போது எனக்குள் எழுந்த உணர்வு அப்படி இருந்தது. எனக்குள் உணர்வு ரீதியான கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் விசித்திரமான விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா, இந்துக்களாக இருப்பவர்கள் நமது மத நம்பிக்கைகளை நமக்குள் மட்டுமே வைத்திருக்கிறோம்.
பிற மத உணர்வுகளை காயப்படுத்தக் கூடாது என நினைத்து நாம் அப்படி செய்கிறோம். மதசார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மீக நம்பிக்கைகளை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிலைதான் இருக்கிறது. ஸ்ரீராமரின் வருகை, பல விஷயங்களை பலரிடம் மாற்றியுள்ளது. நாம் எல்லாம் ராமரின் பக்தர்கள் என உறக்க சொல்வோம், முதல்முறையாக சொல்வோம். ஜெய் ஸ்ரீராம் என ரேவதி குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு வைரலாகி வருகிறது. இத்தனை நாட்கள் உங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த யார் தடுத்தது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications