பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ரூ.25,000 மானியம்.. 2016 தேர்தல் வாக்குறுதியை மீண்டும் கொடுத்த எடப்பாடி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சேலம் ஓமலூரில் இன்று பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. சேலம் ஓமலூரில் இன்று பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பட்டியலின மக்களுக்கு நிலத்துடன் கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும். 125 நாள் வேலைத்திட்டம் அதிமுக ஆட்சிக்கு வந்தபின் 150 நாட்களாக உயர்த்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அம்மா மினி கிளினிக் கொண்டு வரப்படும் ஆகிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, கல்விக் கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.100? என்ன ஆனது என்று திமுக அரசை கேள்வி எழுப்பினார். தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு ஆட்சியை பிடித்த திமுக, ஆட்சிக்கு
வந்தபின் தேர்தல் வாக்குறுதிகளை திமுக மறந்துவிட்டது. 98% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக தவறான தகவலை தெரிவிக்கிறது. திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. அரசு உள்ளதா, இல்லையா என்றே தெரியவில்லை." என விமர்சித்தார்.
2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம். 2019 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. பணிபுரியும் பெண்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் இருசக்கர வாகன விலையில் 50% சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாய், இதில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகை பயனாளிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டது.
இதற்கான விண்ணப்பம், வாகன விலை கொட்டேஷன், விண்ணப்பதாரரின் ஆவணங்கள் இணைத்து முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு, விண்ணப்பித்த பெண்ணின் பெயரில் வாகனத்தை வாங்கி அதற்கான ஆவணத்தை சமர்ப்பித்தால், மானியத்தொகை விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே பலனடைய முடியும். இந்த திட்டம் மூலமாக தமிழகம் முழுவதும் இதுவரை ஆயிரக்கணக்கான பெண்கள் பலனடைந்தனர். 2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த திட்டம் தொடரவில்லை.
2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் வகையிலான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம் பற்றி சட்டசபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, விடியல் பயண திட்டத்தால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர் என்றும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மானிய விலை இருசக்கர வாகன திட்டத்திற்குப் பெரியளவில் வரவேற்பு இல்லை என்றும், மானிய விலை இருசக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பங்கள் எதுவும் வரவில்லை என்றும் அப்போது அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிலையில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார். இந்தச் சூழலில் தான் 10 ஆண்டுகளுக்கு முன்பாக வழங்கப்பட்ட மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் எனும் வாக்குறுதியை மீண்டும் மக்களுக்கு அளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications