Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் சந்தேகம் இல்லை.. கிளீன் சிட் கொடுத்த சிபிஐ! அம்பலப்பட்ட மீடியாக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று மற்றும் இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் ஆகிய இரண்டு செய்திகள் ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்திருந்தன. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து, ஊடகங்களின் கவனம் நடிகை ரியா சக்ரவர்த்தி மீது குவிந்தது. ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி மக்கள் மனதில் ஆர்வத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தின. ஊடகங்களும் இந்த செய்தியை விடாமல் துரத்தின. சிறிய தகவல் கூட ஒரு பெரிய செய்தியாக வெளியிடப்பட்டது. இந்த வழக்கு, தேசிய ஊடகங்களில், கொரோனா வைரஸ் செய்தியையும் பின்னுக்குத் தள்ளியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நடிகை ரியா சக்ரவர்த்திக்கு எதிராக விசாரணை நடைபெற்றது. அவர் 27 நாட்கள் சிறையில் இருந்தார். சமூகம் அவரை மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அவர் கடுமையான விமர்சனங்களையும் ஊடக விசாரணையையும் எதிர்கொண்டார்.

Sushant Singh Rajput Rhea Chakraborty Meida

இந்நிலையில், சனிக்கிழமை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இந்த வழக்கில் இரண்டு க்ளோசர் அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் எந்தவிதமான சதித்திட்டமும் இல்லை என்று சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரியா சக்ரவர்த்தி நிரபராதி என்று சிபிஐ க்ளீன் சிட் கொடுத்துள்ளது என்று கருதலாம்.

இருப்பினும், பாட்னா மற்றும் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றங்கள் இந்த அறிக்கைகள் மீது என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரியா வழக்கறிஞர்

ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர் சதீஷ் மானஷிண்டே, சிபிஐயின் க்ளோசர் அறிக்கைக்குப் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சிபிஐக்கு தனது நன்றியைத் தெரிவித்த அவர், சிபிஐ இந்த வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆழமாக விசாரித்து வழக்கை முடித்துவிட்டதாகக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், "சமூக ஊடகங்களிலும், டிவி ஊடகங்களிலும் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன. நிரபராதிகள் ஊடகங்களாலும் விசாரணை அதிகாரிகளாலும் துன்புறுத்தப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் எந்த வழக்கிலும் மீண்டும் நிகழக்கூடாது என்று நான் நம்புகிறேன். ரியா எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். எந்த தவறும் செய்யாதபோதும் 27 நாட்கள் சிறையில் இருந்தார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சாரங் கோத்வால் அவருக்கு ஜாமீன் வழங்கிய பின்னரே அவர் விடுதலையானார்" என்றார்.

Sushant Singh Rajput Rhea Chakraborty Meida

இந்த வழக்கில் முதல் க்ளோசர் அறிக்கை, சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது தந்தை ரியா சக்ரவர்த்தி மீது அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது க்ளோசர் அறிக்கை, நடிகை ரியா சக்ரவர்த்தி சுஷாந்தின் சகோதரிகள் மீது அளித்த புகார் தொடர்பானது.

ரியா சக்ரவர்த்தியின் தரப்பில் இருந்து தற்போது எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. நடிகை தியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ரியா சக்ரவர்த்தியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கும் ஊடகங்கள் உண்டா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "நீங்கள் அவரை வேட்டை ஆடினீர்கள். டிஆர்பிக்காக அவரை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கினீர்கள், சுரண்டினீர்கள். மன்னிப்பு கேளுங்கள். குறைந்தபட்சம் இதை மட்டுமாவது நீங்கள் செய்ய முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நான் எனக்கே எதிராக போராடிக் கொண்டிருக்கிறேன்

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் (தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமானவர்) மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் இது தற்கொலை என்று தெரிவித்தனர். இதையடுத்து, அவரது தோழியான ரியா சக்ரவர்த்திக்கு எதிராக சமூக ஊடகங்களில் ஒரு தரப்பினர் வெறுப்பு கருத்துக்களை தெரிவித்தனர். ஊடகங்களிலும் இந்த செய்தி பரபரப்பான வழக்காக சித்தரிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு ரியா சக்ரவர்த்தி தனது மௌனத்தை உடைத்தார். சுஷாந்த் தனது காதலன் என்று சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

Sushant Singh Rajput Rhea Chakraborty Meida

மேலும் அவர் இன்ஸ்டாகிராமில், "இன்னும் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கிறேன். எனக்கே எதிராக போராடிக் கொண்டிருக்கிறேன். என் இதயத்தில் ஒரு வெறுமை வந்துவிட்டது. நீதான் எனக்கு காதலையும், காதலின் சக்தியையும் நம்பக் கற்றுக் கொடுத்தாய். வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய கணித சூத்திரம் எப்படி உதவும் என்று நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய். உன்னிடமிருந்து ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொண்டேன். நீ இனி இங்கே இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நீ இப்போது அதிக அமைதியான வாழ்க்கையை வாழ்கிறாய் என்று எனக்குத் தெரியும்" என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இந்த சம்பவம் நடந்தபோது ரியா சக்ரவர்த்தி திரைப்படத்துறையில் தனது இடத்தை நிலைநிறுத்த முயற்சித்துக்கொண்டிருந்தார். ஒருபுறம் நண்பனை இழந்த துக்கம், மறுபுறம் ஒவ்வொரு நாளும் புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக அவர் மருந்துகள் எடுத்துக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாயின. மேலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தினர் ரியாவுக்கு எதிராக தற்கொலைக்குத் தூண்டுதல், திருட்டு, நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினர். அதே நேரத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) ரியா சக்ரவர்த்தி சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக குற்றம் சாட்டியது.

Sushant Singh Rajput Rhea Chakraborty Meida

ரியா சக்ரவர்த்தி ஒரு நண்பரை இழந்திருந்தார், ஆனால் அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டார். அதிலிருந்து மீள்வதற்கு அவருக்கு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

ரியாவுக்கு இதற்கான இழப்பீட்டை எப்படி வழங்குவது?

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் ஆய்வுத் துறையின் டாக்டர் அமீர் சுல்தானா கூறுகையில், இந்திய சமூகத்தில் பெரும்பாலான வழக்குகளில் பெண்கள் தான் குறிவைக்கப்படுகிறார்கள். "ரியா தனது பேட்டியில் சுஷாந்திற்கு அவரது தந்தையுடன் நல்ல உறவு இல்லை என்று கூறியிருந்தார். தாய் இறந்த பிறகு சுஷாந்த் சோகமாக இருந்தார். அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்படி அவர் கூறினார். ரியா அவருக்கு உதவத்தான் செய்தார். ஆனால் சுஷாந்தின் குடும்பத்தினர் ரியா மீது குற்றம் சாட்டினர். இந்த முழு நடவடிக்கையும் ஏதோ அரசியல் அல்லது வேறு ஏதேனும் செல்வாக்கின் கீழ் நடந்ததாக எனக்குத் தோன்றுகிறது." என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், "இன்று இந்த அறிக்கை வந்துள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளில் சமூக ஊடகங்களும், ஊடகங்களும் ரியாவை மிகவும் மோசமாக சித்தரித்துவிட்டன. இப்போது சொல்லுங்கள், ரியாவுக்கு இதற்கான இழப்பீட்டை எப்படி வழங்குவது? அவரது அந்த நாட்களைத் திரும்பக் கொடுக்க முடியுமா? அவரும் திரையுலகில் தனது இடத்தை நிலைநிறுத்த முயற்சித்துக்கொண்டிருந்தார். பொருளாதார இழப்பு ஏற்பட்டது. அவரது மன ஆரோக்கியம் என்ன ஆனது? இதற்கு யார் பதிலளிப்பார்கள்? இதை எப்படி ஈடு செய்வது?" என்று கேள்வி எழுப்புகிறார்.

Sushant Singh Rajput Rhea Chakraborty Meida

சுஷாந்த் வழக்கு மட்டுமல்ல, பல வழக்குகளிலும் ஊடக விசாரணை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊடகத்தின் பங்கு யாரையும் தவறானவர் அல்லது சரியானவர் என்று தீர்ப்பளிப்பது அல்ல. நிகழ்ந்த சம்பவத்தை செய்தியாக வெளியிடுவதுதான். அல்லது புலன் விசாரணை செய்து ஆதாரங்கள் அடிப்படையில் சிறப்பு செய்தி வெளியிடுவதுதான்.

ஆனால் ரியா வழக்கு, 2008 ஆம் ஆண்டு நடந்த ஆரூஷி கொலை வழக்கு அல்லது சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் கும்பமேளாவில் மாலை விற்று சம்பாதித்த 'மோனாலிசா'வின் உதாரணம் என எதுவாக இருந்தாலும், ஊடகத்தின் பங்கு எப்போதும் கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது.

சாக்ஷி சிங்லா கூறுகையில், "ஊடகங்கள் இப்போது உண்மைகளை அல்ல, தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றன. அதுவும் பரபரப்பான முறையில் பலமுறை கூறப்படுவதால், சாதாரண மனிதன் அந்த செய்தி, சரியா, இல்லையா என்று புரிந்து கொள்ள முடிவதில்லை." என்கிறார்.

தேசிய ஊடகங்கள் அம்பலப்பட்டன

ரியா மற்றும் சுஷாந்தின் தனிப்பட்ட வாழ்க்கை ஊடகங்களில் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டது. இதில் ரியா ஒரு பக்கமும், சமூகம், சுஷாந்தின் குடும்பம், சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் மறுபக்கமும் நின்றதாகத் தெரிந்தது. அதுமட்டுமின்றி, இந்த வழக்கு ஒரு கட்டத்தில் பீகார் மற்றும் மேற்கு வங்காளம் இடையேயான பிரச்சினையாகவும் மாறியது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் திரைப்படத் துறையும் வெளிப்படையாக கருத்து சொல்ல முன்வரவில்லை. அதே நேரத்தில் ஷபானா ஆஸ்மி, தியா மிர்சா மற்றும் வித்யா பாலன் போன்ற சிலரே ரியா சக்ரவர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

Sushant Singh Rajput Rhea Chakraborty Meida

டாக்டர் அமீர் சுல்தானா கூறுகையில், "சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் மார்பகத்தைப் பிடிப்பதும், சல்வார் நாடாவை அவிழ்ப்பதும் பாலியல் வன்கொடுமை ஆகாது என்று கூறப்பட்டது. ஆனால் இது குறித்து சமூக ஊடகங்களோ அல்லது ஊடகங்களோ ஏன் விவாதிக்கவில்லை? இதுபோன்ற பிரச்சினைகள் ஏன் எழுப்பப்படுவதில்லை? இந்த இரு விவகாரங்களிலும், பிரச்சினைகளிலும், அது சமூகம் அல்லது நீதித்துறை யாராக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் தான்."

இத்தகைய சம்பவங்களை ஊடகங்கள் எப்படி கையாள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதனால் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையும், உணர்வுகளும் பாதிக்கப்படக்கூடாது என்கிறார் அவர். பீகார் தேர்தலின்போது இந்த மரணத்தை வைத்து பாஜக தரப்பில் தீவிரமாக வாக்கு வேட்டையாடப்பட்டது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+