சின்னய்யாவை தனிக்கட்சி ஆரம்பிக்க சொன்ன அய்யா? ராமதாஸை இயக்குவது யார்? பாமகவினருக்கு 5 டவுட்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதல் இப்போதைக்கு முடியாது போல.. பொதுவெளியில் தந்தை ராமதாஸிடம் மகன் அன்புமணி மன்னிப்பு கேட்பதாக சொல்லியும் அடுத்தடுத்து நிர்வாகிகளை நீக்கி வருகிறார் ராமதாஸ். இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராமதாஸ் அன்புமணியை தனிக்கட்சி துவங்க சொன்னதாக கூறியிருக்கிறார். இதனால் ராமதாஸ் செயல்பாடுகளில் தடுமாற்றம் தெரிவதாக கூறும் பாமகவினர் சமூக வலைதளங்களில் ஐந்து கேள்விகளை முன் வைத்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் கட்சியின் தலைவரான அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதோடு செயல் தலைவராக நியமிப்பதாக அறிவித்ததில் இருந்தே பிரச்சனை தீவிரமடைந்திருக்கிறது.
அதற்குப் பிறகு நடந்த வன்னியர் சங்க மாநாட்டிலும் ராமதாஸ்-ன் பேச்சு கட்சிக்குள்ளும் பொது வெளியிலும் புயலை கிளப்பியது. அன்புமணி ராமதாஸோ, ராமதாஸின் கனவை நிறைவேற்றுவோம்.. ஐயா வழியில் நடப்போம் என கூறி இருந்தார்.

பாமக மோதல்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் அன்புமணியின் தாயை அடிக்க பாய்ந்தார், பாட்டிலை வீசினார் என்றெல்லாம் அவர் கூறிய கருத்துக்கள் பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து சில நிர்வாகிகளை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்ட நிலையில் அவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்ததாக அன்புமணி ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட்டார்.
அன்புமணி ராமதாஸ்
இதற்கிடையே வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி வருகிறார் அன்புமணி ராமதாஸ். இந்த நிலையில் இன்று தர்மபுரி, சேலத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அப்பகுதி பாமக முக்கிய புள்ளிகளான எம்எல்ஏக்கள் அருள், ஜிகே மணி ஆகியோர் நெஞ்சுவலி எனக்கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அன்புமணி கூட்டத்தில் கலந்துகொண்டால் ராமதாஸின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால் அன்புமணியின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும் என நினைத்தே அவர்கள் மருத்துவமனையில் நெஞ்சுவலி என தாங்களாகவே அட்மிட் ஆனதாக விமர்சிக்கப்படுகிறது.
ராமதாஸ்
இந்த நிலையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராமதாஸ் பல்வேறு கருத்துகளை முன் வைத்துள்ளார். அதில் அன்புமணியை தனிக் கட்சியை துவங்கி கொள் என மூன்று முறை சொன்னதாக தெரிவித்திருக்கிறார். மேலும் பல கருத்துக்களை ராமதாஸ் பகிர்ந்து இருக்கும் நிலையில் அவரது செயல்பாடுகளில் தடுமாற்றம் தெரிவதாகவும், அவரது பின்னணியில் இருந்து யாரோ இயக்குவதாகவும் முகுந்தனை பகடைக்காயாக பயன்படுத்துவதாக கூறுகின்றனர் பாமகவினர்.
பாமக குழப்பம்
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஐந்து கேள்விகளை முன் வைத்துள்ளனர். அதில்," மருத்துவர் ராமதாஸ் ஒரு யூட்யூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், அன்புமணியை தனிக்கட்சி துவங்கிக் கொள் என மூன்று முறை சொன்னதாக தெரிவித்திருக்கிறார். எழும் கேள்விகள் ? கட்சி நிர்வாகிகளை எக்காரணம் கொண்டும் மாற்ற மாட்டேன் என தெரிவித்த ராமதாஸ், தொடர்ந்து நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
பாமகவிற்கு துரோகம்
மருத்துவர் ராமதாஸ் நியமிக்கும் பல நிர்வாகிகள் குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும், பாமகவிற்கு துரோகம் செய்துவிட்டு வேறு கட்சிக்கு சென்றவர்களாகவும் இருக்கின்றனர். அன்புமணி தன்னைக் கட்சியை விட்டு நீக்கிவிடுவார் என்பதற்காக, மாவட்ட செயலாளர்களை தைலாபுரம் தோட்டத்திற்கு அனுப்பவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டை ராமதாஸ் முன்வைத்து வருகிறார். நான் எப்படி அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன் என தெரிவிக்கிறார்.
ராமதாசை இயக்குவது யார்?
ஆனால் அவரே, அன்புமணியை தனிக்கட்சி ஆரம்பிச்சுக்கோ என அன்புமணியிடம் தெரிவித்திருக்கிறார். அப்படி என்றால் கட்சியை விட்டு அன்புமணியை நீக்கும் திட்டம் ராமதாஸிடம் இருந்திருக்கும் அல்லவா? அதன் வெளிப்பாடு தானே இது? அப்படியென்றால் ராமதாசை இயக்குவது யார்? முகுந்தனை பகடை காயாக பயன்படுத்துபவர்கள் யார்? ராமதாஸ் பின்னாடி இருக்கும் முகம் தெரியாத ஒரு நபர்தான் இத்தனை பிரச்சனைக்கு காரணமா? சூழ்ச்சி செய்பவர்கள் யார் யார் என கேள்வி இயல்பாகவே இருக்கிறது" என ஒட்டுமொத்தமாய் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications