கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரிக்கும்..மத்திய அரசு நடத்திய முக்கிய ஆலோசனை..ஏன் முக்கியம்?
கோடை காலத்தில் மின் தடை இல்லாதவகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மின் உற்பத்தி நிறுவனங்களை மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கேட்டுக்கொண்டார்.
சென்னை: கோடைக்காலத்தில் அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே சிங் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மின்சாரம், நிலக்கரி, ரயில்வே ஆகிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கோடை காலத்தில் மின் தடை இல்லாதவகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மின் உற்பத்தி நிறுவனங்களை மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கேட்டுக்கொண்டார்.
கோடை காலம் துவங்க உள்ள நிலையில், நாடு முழுவதும் வெப்பம் தகிக்க உள்ளது. உஷ்ணம் அதிகரிப்பால் நாட்டில் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது.
அதீத வெப்பம் காரணமாக ஏசி உள்ளிட்ட இயந்திரங்களின் பயன்பாடுகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், மின்சார தேவையும் உயர்ந்துள்ளது.

அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
அதிகரித்து வரும் மின் தேவையால் மின் தட்டுப்பாடு எற்படாமல் தடுக்க போதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க தொடங்கியுள்ளது. மின் தேவையை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் மின்சாரம், நிலக்கரி, ரயில்வே ஆகிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஒளிவு மறைவு அற்ற அணுகுமுறை
இந்தக் கூட்டத்தில் கோடை காலத்தில் மின் தடை இல்லாதவகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மின் உற்பத்தி நிறுவனங்களை மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கேட்டுக்கொண்டார். மின் தேவை அதிகரிக்கும் என்பதால் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்வதில் ஒளிவு மறைவு அற்ற அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மின்சார ஆணையத்தை வலியுறுத்தினார்.

16 ஆம் தேதி முதல்
மத்திய மின்சார வாரியத்தின் மதிப்பீட்டின் படி ஏப்ரல் மாதத்தில் உச்சபட்சமாக மின்சார தேவை 229 ஜிகாவாட் ஆக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், பன்முனை வியூகம் ஒன்றை மத்திய மின்துறை அமைச்சகம் வகுத்துள்ளது. அதாவது மின் உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள மின் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. அதேபோல், வெளிநாட்டு இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் வரும் 16 ஆம் தேதி முதல் தங்கள் முழுத்திறனை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

9 ஆயிரம் மெகாவாட் வரை
நிலக்கரி கொண்டு செல்ல வசதியாக 418 பெட்டிகளை அளிக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதைத்தவிர கோடை காலத்தில் ஏற்படும் அதிகபட்ச மின் தேவையை பூர்த்தி செய்ய எரிவாயுவை பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்யும் நிலையங்களும் கோதாவில் இறங்கியுள்ளது. எரிவாயு மூலம் 9 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கும். போதிய எரிவாயு வினியோகம் செய்வதாக 'கெயில்' நிறுவனமும் உறுதி அளித்து இருக்கிறது. இந்த மாத இறுதியில் உற்பத்தியை தொடங்கும் புதிய நிலக்கரி மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் 2, 920 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் கோடைகாலத்தில் அதிகரிக்கும் மின்சார தேவை பூர்த்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications