Rithanya: ரிதன்யாவை "நாயை போல்" நடத்திய கவின்குமார்! உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு
சென்னை: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ரிதன்யா வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அவிநாசியைச் சேர்ந்த ரிதன்யா, திருமணமான 78 நாட்களில் வரதட்சணைக் கொடுமை, கணவரின் பாலியல் தொல்லைகள் தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த விவகாரத்தில், ரிதன்யா தனது கணவர் வீட்டார் மீது குற்றம்சாட்டிய ஆடியோ வெளியான நிலையில், கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் மூவரும் ஜாமீன் கேட்டு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தனர். அந்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, கவின்குமார் உட்பட 3 பேரும் ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ரிதன்யா என்பவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்த 27 வயது இளம் பெண். எம்.எஸ்சி படித்துள்ளார். அவருக்கு, கடந்த ஏப்ரல் 11 அன்று கவின்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான 78 நாட்களில், வரதட்சணைக் கொடுமை மற்றும் கணவரின் பாலியல் தொல்லைகளால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் இறப்பதற்கு முன், தனது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மற்றும் மாமியார் சித்ரா தேவி ஆகியோர் தனக்கு அளித்த கொடுமைகள் குறித்து விரிவாகப் பதிவு செய்த ஒரு ஆடியோ செய்தியை தனது பெற்றோருக்கு அனுப்பியிருந்தார்.
ரிதன்யாவுக்கு திருமணத்தின் போது 300 சவரன் நகை, 70 லட்சம் மதிப்பிலான கார், சீர் பொருட்கள் எல்லாம் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டது. எனினும் கவின் குடும்பத்தினர் மேற்கொண்டு 200 பவுன் நகையை வாங்கி வருமாறு ரிதன்யாவை கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.
அது போல் கணவர் கவின்குமாரும், இயற்கைக்கு மாறாக உறவு வைத்துக் கொள்ள ரிதன்யாவை, துன்புறுத்தியதாகவும் அழுதுக் கொண்டே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இறப்பதற்கு முன்பு அவர் வெளியிட்ட வாக்குமூல ஆடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications