ரிதன்யா பிரேத பரிசோதனை ரிப்போர்ட் என்னாச்சு? வரதட்சணை மாமியாருக்கு ஷாக் தந்த கோர்ட்.. விறுவிறு
திருப்பூர்: வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை இந்த வழக்கில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிதன்யா கணவர் வீட்டில் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மனரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கை வெளியாகும் பட்சத்தில் அது கவின் மற்றும் அவரின் பெற்றோருக்கு பெரிய சிக்கலாக மாறும்.

ரிதன்யா தற்கொலை முடிவை எடுக்கும் முன் பேசிய ஆடியோ கவனம் பெற்றுள்ளது. தற்கொலை முடிவை எடுக்கும் சில வினாடிகளுக்கு முன் அவர் பேசி இருக்கிறார். அதை அப்பாவிற்கு அனுப்பி இருக்கிறார். தற்கொலைக்கு முன் பேசிய அந்த ஆதாரம் மிக முக்கியமானது. மிக முக்கியமான மின்னணு ஆதாரம் அது. அதில் கணவர், மாமனார், மாமியார் என்று 3 பேர் மீதும் ரிதன்யா புகார் அளித்துள்ளார்.
மெண்டல் டார்ச்சர் யார் கொடுத்தார், உடல் ரீதியான டார்ச்சர் யார் கொடுத்தார் என்பதை எல்லாம் தெளிவாக பேசி உள்ளார். அந்த ஆதாரங்கள் இருக்கின்றன. அவர் போனில் இருந்தே போலீசார் எடுத்துள்ளனர். கோர்ட்டிற்கு கொடுத்துவிட்டனர். அங்கிருந்து லேபிற்கு சென்றுவிடும். அதை வைத்தே முடிவை கண்டுபிடிக்கலாம் என்பதால் வழக்கில் அவை முக்கிய ஆதாரங்களாக மாறி உள்ளன. இதோடு பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகும் சூழலில், கவின் குடும்பத்திற்கு ஜாமீன் கிடைப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம் ஆகிவிடும்.
ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு
இன்றுதான் திருப்பூர் நீதிமன்றம், ரிதன்யாவின் மாமியார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ரிதன்யாவின் மாமியாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று அவரது தந்தை தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே, ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் கவினின் தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலமாக இருப்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று ரிதன்யா தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், ரிதன்யாவை அவரது கணவர் கவின்குமார் உடல் ரீதியாகக் கடுமையான சித்ரவதைகளைச் செய்துள்ளார் என்றும், இது தெரிந்தும் கவினின் பெற்றோர் கண்டிக்கவில்லை என்றும் ரிதன்யா தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கவின்குமார் மற்றும் அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ரிதன்யாவின் மாமியார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை திருப்பூர் நீதிமன்றம் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ரிதன்யா வழக்கு
ரிதன்யாவுக்கும், கவினுக்கும் 2025 ஏப்ரல் 11-ம் தேதி திருமணம் நடந்தது. ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகை மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வோல்வோ கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்ததாகவும், மூன்றாவது வாரத்தில் இருந்து வாக்குவாதங்கள் தொடங்கியதாகவும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அண்ணாதுரையும், ரிதன்யாவின் தாயாரும் தலையிட்டு ரிதன்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
ரிதன்யாவிற்கு நேர்ந்த கொடுமை
கவின் அவ்வப்போது ரிதன்யாவைப் பார்க்க வந்துள்ளார். 20 நாட்களுக்குப் பிறகு, கவின் அவளை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜூன் 22-ம் தேதி கவின், ரிதன்யாவை அவரது பெற்றோரின் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வந்தபோது, ரிதன்யா சோகமாகவும், மன அமைதி இழந்தும் காணப்பட்டார். அப்போது ரிதன்யா, "எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்றும், நான் எனது பெற்றோர் வீட்டில் தங்க விரும்புவதாகவும்" கூறியுள்ளார். அடுத்த நாளே கோவிலுக்கு சென்றவர் அங்கேயே காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications