வேலைவாய்ப்பு பெறும் அளவுக்கு தமிழக மாணவர்களிடம் திறமை இல்லை! இதை நான் சொல்லவில்லை! ஆளுநர் ரவி பேச்சு
சென்னை: வேலைவாய்ப்பு பெறும் அளவுக்கு தமிழக மாணவர்களிடம் திறமை இல்லை என பல்வேறு தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக ஆளுநர் ரவி பேசியிருக்கிறார்.
கல்வியை காட்டிலும் தனித்திறமை இருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பை பெற முடியும் என்றும் மாணவர்கள் தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தேசிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை அதுவொரு புரட்சிகரமான திட்டம் என்றும் இதன் மூலம் திறன்மிக்க இளைஞர்கள் தமிழகத்தில் உருவாவார்கள் எனவும் ஆளுநர் ரவி தெரிவித்திருக்கிறார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள கல்லூரி ஒன்றில், தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
நாட்டில் பல லட்சம் இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி இருப்பதாக குறிப்பிட ஆளுநர் ரவி, வேலைவாய்ப்பு பெற கல்வி மட்டும் கற்றால் போதாது தனித்திறமை அவசியம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் தமிழக மாணவர்களிடம் வேலை வாய்ப்பை பெறும் அளவுக்கு தனித்திறமைகள் இல்லை என்பதை தான் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். ஆளுநர் ரவியின் கருத்துக்கள் அனைத்தும் சர்ச்சையை உருவாக்கும் வகையிலேயே அமைகின்றன.
2 நாட்களுக்கு முன்னர் வள்ளலாரை சனாதன தர்மத்துடன் தொடர்புப்படுத்தி பேசி கடும் எதிர்வினைகளை சந்தித்தார். இப்போது தமிழக மாணவர்கள், இளைஞர்களின் திறமை குறித்து பேசியிருக்கிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகம் முழுவதும் கொடிக்கட்டி பறந்துகொண்டிருப்பது தமிழக இளைஞர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
