எல்ஐசி ஹைட்டு.. பச்சையப்பாஸ் வெயிட்டு! மீண்டும் தலை தூக்கும் ரூட்டு தல! முகம் சுழிக்கும் பொதுமக்கள்
சென்னை: சென்னையில் மீண்டும் ரூட்டு தல விவகாரம் தலை தூக்கி இருப்பதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில்களில் முழக்கம் இடுவதும் சாகசம் செய்வதுமாக அட்டகாசம் செய்து வரும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் பொதுமக்கள்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் தங்களது கால்களை தரையில் தேய்த்தபடியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பொதுமக்கள் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

மேலும் மாணவர்கள் ரயிலிலும், பேருந்திலும் படியில் தொங்கியபடி சாகசம் செய்வதாகக் கூறி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து, பேருந்து, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கூறினாலும், ஆசிரியர்கள் கூறினாலும் அதைப் பொருட்படுத்தாமல் சில மாணவர்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக தலைநகரான சென்னையில் கைகளில் கத்திகளுடன் பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் மாஸ் காட்டுவதாக நினைத்து அட்டகாசம் செய்து வரும் மாணவர்களின் அத்துமீறலால் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே சென்னையில் ரூட்டு தல பிரச்சனை காரணமாக மோதல்கள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் அடிக்கடி பிரச்சினை வருகிறது. அரசு பேருந்துகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது. ரயில்களில் தாங்கள் தான் 'ரூட் தல' என கூறிக் கொண்டு இரு கல்லூரி மாணவர்களும் கல், கட்டை, பாட்டில்கள், பட்டாக்கத்திகளுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதும் மாணவர்கள் தங்கள் உயிரை இழப்பதும் தொடர்ந்து வருகிறது.
கடந்த மாதம் கூட ரூட் தல மோதலில் சுந்தர் என்ற மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் மீண்டும் ரூட்டு தல விவகாரம் தீவிரமடைந்திருப்பதாகக் கூறுகின்றனர் ரயில் பயணிகள்.
திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்திருக்கின்றனர். அந்த ரயிலில் பிற கல்லூரி மாணவர்களும் இருந்த நிலையில் ’எல்ஐசி ஹைட்டு பச்சையப்பாஸ் வெயிட்டு” என முழக்கம் இட்டதோடு, நா கூசும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய தொடங்கினர்.
தொடர்ந்து மாணவர்கள் சில கும்பலாக சேர்ந்து கொண்டு ரயில் படியில் தொங்குவது, ஜன்னல் கம்பியில் தொங்குவது என அட்டகாசம் செய்தனர். இதனால் ரயிலில் இருந்த பிற பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. ஏற்கனவே ரூட்டு தல பிரச்சனையில் மாணவர்கள் அடிக்கடி மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மீண்டும் ரூட்டு தல விவகாரமும் கல்லூரி மாணவர்கள் இடையேயான மோதலும் அதிகரித்து வருவதாகவும், ரயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்ம் மேலும் நிரந்தரமாக ரயிலில் காவல்துறை கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications