"என்னை அனுப்பிடாதீங்க..” நீதிபதியிடம் கதறிய ரவுடி நாகேந்திரன்! 3 நாள் போலீஸ் காவல் வழங்கியது கோர்ட்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 24 வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் இருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிளான் போட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார் ரவுடி நாகேந்திரன்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வேலூர் மத்திய சிறையில் இருந்த வட சென்னையைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரன் 24வது நபராக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய தனது மகன் அஸ்வத்தாமன் உடன் சேர்ந்து நாகேந்திரனும் வேலூர் மத்திய சிறையில் இருந்தே திட்டம் போட்டதாக செம்பியம் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே ஏற்கனவே இருந்த மோதலில், ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமன் உள்ளிட்டோரோடு சேர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த ஒரு வருடமாக நாகேந்திரனை சிறையில் வந்து சந்தித்தவர்கள் யார் யார், அவர் மருத்துவமனைக்கு சென்றபோது விசிட்டர்களாக வந்து பார்த்தவர்கள் யார் யார் என்ற விவரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் நாகேந்திரன் தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரன் 24 வது நபராக சேர்க்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் நாகேந்திரனை கைது செய்வதற்கான வாரண்டை கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் தனிப்படை போலீசார் பெற்றனர்.
அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 9 ஆம் தேதி வேலூர் மத்திய சிறைக்குச் சென்று, அங்கு சிறைத்துறை அதிகாரிகளிடம் கைது செய்வதற்கான வாரண்ட் ஆவணங்களை சமர்ப்பித்தனர். அப்போது நாகேந்திரனிடம் ஆவணத்தை போலீசார் வழங்க முயன்ற போது, கொலைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை எதற்காக வழக்கில் சேர்த்திருக்கிறீர்கள்? என் மகன் அஸ்வத்தாமனை எதற்காக கைது செய்து இருக்கிறீர்கள் எனக் கூறி, கைது ஆவணத்தை வாங்காமல் கையெழுத்து போடாமல் போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
நாகேந்திரனிடம் கையெழுத்து பெற போலீசார் 30 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்தனர். ஆனாலும், நாகேந்திரன் கையொப்பம் இட மறுத்ததால், கைதுக்கான ஆவணத்தில், சிறைத் துறை அதிகாரிகளின் கையொப்பம் பெற்று நாகேந்திரன் உள்ள அறைக்கு முன்பாக சுவரில் ஒட்டி விட்டுச் சென்றனர்.
இந்த வழக்கில் கைது செய்த நாகேந்திரனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் போலீசார் இன்று அவரை அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், நாகேந்திரன் 7 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கு போலீசார் அனுமதி கேட்டனர்.
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டதால், போலீஸ் காவலில் செல்லமாட்டேன் என நாகேந்திரன் மறுப்பு தெரிவித்தார். தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பவேண்டாம் என நீதிபதியிடம் முறையிட்டார் ராகேந்திரன்.
ஆனால், ரவுடி நாகேந்திரனௌ 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார். நாகேந்திரனை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரிக்க உள்ள நிலையில், பல தகவல்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications