என்கவுண்டர்.. யார் இந்த ரவுடி திருவேங்கடம்? ஆம்ஸ்ட்ராங்கை 10 நாட்களாக நோட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டாரா?
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முன்பாக 10 நாட்களாக தொடர்ச்சியாக ஆம்ஸ்ட்ராங்கை ஆட்டோவில் சென்று நோட்டமிட்டு, அவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி, கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பொன்னை பாபு, ராமு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள காவல்துறையினர், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து, தனித்தனியாக, துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன? எப்போது, எங்கு, எப்படி கொலையை அரங்கேற்ற வேண்டும் என திட்டம் தீட்டிக் கொடுத்தது யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துளைத்து எடுத்த போலீசார்: ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கான டீமை வழிநடத்தியது யார்? யார் யாருக்கு தொடர்பு உள்ளது? பின்னணியில் பெரிய கை ஏதேனும் உள்ளதா எவ்வளவு பணம் கைமாறியது? என்பன போன்ற கிடுக்கிபிடி கேள்விகளால் 11 பேரையும் துளைத்தெடுத்து வருகின்றனர் தனிப்படை போலீசார்.
கைதானவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்த இடங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர் போலீசார். இந்நிலையில், காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடத்தை இன்று காலை 5:30 மணியளவில் விசாரணைக்காக சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றுள்ளனர்.
தப்பிக்க முயன்ற திருவேங்கடம்: ஆம்ஸ்ட்ராங் கொலையின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை திருவேங்கடம் ரெட்டேரி பகுதியில் பதுக்கி வைத்திருந்ததாக கூறிய நிலையில் ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, ரவுடி திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
யார் இந்த ரௌடி திருவேங்கடம்?: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில் ரவுடி திருவேங்கடமும் ஒருவர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணைக்கு அழைத்து சென்ற போது தப்பியோட முயன்ற ரவுடியை போலீசார் சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் முக்கிய குற்றவாளி என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 2014-ல் குன்றத்தூரில் நடந்த கொலை, 2015ல் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் நடந்த திருவள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் தென்னரசு கொலை வழக்குகளில் தொடர்புள்ளவர் திருவேங்கடம்.
ஆட்டோவில் நோட்டமிட்டு ஸ்கெட்ச்: திருவேங்கடம் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முன்பாக 10 நாட்களாக ஆம்ஸ்ட்ராங்கின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக கண்காணித்து, அவர் எந்த நேரத்தில் எங்கே செல்வார், பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு எந்த நேரத்தில் வருவார், எப்போது அவரிடம் துப்பாக்கி இருக்காது என்பதையெல்லாம் கண்காணித்து ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர் என போலீசார் கூறுகின்றனர்.
திருவேங்கடம், ஆட்டோ டிரைவர் போல நடித்து, ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து ஃபாலோ செய்து வந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை கொல்வதற்கான ரூட் மேப்பை கூலிப்படையினருக்கு அவர் தான் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரை தொடர்ந்து சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திர நாயர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை அருகே திருச்சி ரவுடி துரை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் போலீசாரின் அடுத்தடுத்த என்கவுன்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications