கேஸ் சிலிண்டர் கசிவு.. இழப்பீடு கேட்ட பெண்.. சென்னை நுகர்வோர் நீதிமன்றம் தந்த இன்ப அதிர்ச்சி
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என சென்னை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்துகள் ஏற்பட்டால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சாமானியர்களும் இழப்பீடு பெற முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாகும்.
சென்னை அண்ணாநகர் மேற்கு ஜெயந்தி காலனி பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ' நான் கடந்த 2008-ம் ஆண்டு என்னுடைய வீட்டில் பயன்படுத்தி வந்த கேஸ் சிலிண்டர் காலியானதை தொடர்ந்து தயாராக இருந்த மற்றொரு கேஸ் சிலிண்டரை பயன்படுத்த தொடங்கினேன். அப்போது திடீரென கேஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில், எனக்கு தீக்காயம் ஏற்பட்டது. என்னுடைய வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. இந்த தீ விபத்துக்கு கேஸ் சிலிண்டரின் 'வாஷர்' (உள்மூடி) தான் காரணம் ஆகும். எனவே, இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கீதா தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'புகார்தாரருக்கு கேஸ் சிலிண்டர் வினியோகிக்கும் போது, கசிவு எதுவும் இல்லை. கேஸ் சிலிண்டரை மாற்றும் போது, தவறாக கையாண்டதில் கசிவு ஏற்பட்டு இருக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம், 'கேஸ் சிலிண்டரை வினியோகிக்கும் போது கசிவு எதுவும் இல்லை என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, மனுதாரருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் கேஸ் ஏஜென்சி ஆகியவை இணைந்து இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். சேவை குறைபாடு, மன உளைச்சல், மருத்துவ செலவு, பொருட்சேதம் ஆகியவற்றுக்காக ரூ.1 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக கேஸ் கசிவு ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் அவசரப் பிரிவிற்கு அழைக்க வேண்டும். அவர்களிடம் புகார் அளித்தால், உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள்.. கேஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியின் மெக்கானிக்கிற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
உடனடியாக மெக்கானிக் கேஸ் கசிவை பார்த்து விட்டு கால்சென்டருக்கு தகவல் தெரிவிப்பார். இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே கேஸ் கசிவு ஏற்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனே புகார் அளிப்பது நல்லது. ஒருவேளை விபத்து ஏற்பட்டால் வழக்கு தொடர்ந்து இழப்பீடும் பெற முடியும். எனினும் ஆபத்தான இந்த விவகாரத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications