சென்னையில் ரூ.4,400 கோடி பண மோசடி.. ஹிஜாவு நிறுவன மோசடியில் கணவரோடு சிக்கிய மேலாளர்!
சென்னை: சென்னையில் செயல்பட்டு வந்த ஹிஜாவு நிதி நிறுவனம் 89 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.4,400 கோடி பணமோசடி செய்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை உலுக்கிய இந்த பணமோசடி வழக்கில் அதன் மேலாளராக இருந்த பெண் மற்றும் அவரது கணவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடேட் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிறுவனம் பொதுமக்களை சந்தித்து அவர்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசியது.

அதாவது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். விரைவில் முதலீட்டை விட அதிகளவு பணத்தை எங்கள் நிறுவனம் மூலம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளை அந்த நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
இதை நம்பி ஏராளமானவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இவ்வாறு பல கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் இருந்து அந்த நிறுவனம் முதலீடு பெற்றது. இருப்பினும் கூறியபடி அந்த நிறுவனம் வட்டி தொகை வழங்காமல் இருந்துள்ளது. வட்டித்தொகையை கேட்டாலும் நிறுவனம் சார்பில் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பலரும் தங்களின் முதலீட்டு தொகையை திரும்ப கேட்டுள்ளனர். நிறுவனத்தினர் அதனை கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து முதலீடு செய்த மக்கள் நிறுவனத்தை நடத்தும் நிர்வாகிகள் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களை ஏமாற்றியது உண்மை என்பது தெரியவந்தது.
மொத்தம் 89,000 பேரிடம் பணம் பெற்று அந்த நிறுவனம் பல கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.4,400 கோடி வரை அந்த நிறுவனம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ஹிஜாவு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்தனர். மொத்தம் 30க்கும் அதிகமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு நிறுவனம் சார்ந்த இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.3.34 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.41 கோடி மதிப்பிலான சொத்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே நிறுவனத்தின் நிர்வாகிகள் தலைமறைவாகினர். அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தான் தற்போது 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹிஜாவு நிறுவன மேலாளராக இருந்த சுஜாதா காந்தா, அவரது கணவர் கோவிந்தராஜுலு ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications