டாஸ்மாக்கில் மாற்றம்? பாட்டிலுக்கு ரூ10.. ஊழியர்களின் குறையை ஆய்வு செய்ய குழு! கோர்ட்டில் அரசு தகவல்
சென்னை: டாஸ்மாக் நிறுவனம் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பாட்டில் வியாபாரிகள் நல சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மலைப்பகுதிகளில் சுற்றுலா செல்லும் பயணிகள், மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கேயே வீசி சென்றுவிடுகிறார்கள். மதுபாட்டில்களை வாங்கி செல்லும் குடிமகன்கள், மலைப்பகுதிகளில், காடுகளில், சாலையோரங்களில் வீசி விடுவதால், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது..

மலைப்பிரதேசங்கள்
கால்நடைகளின் கால்களில் இந்த பாட்டில்கள் குத்தி காயங்களையும் ஏற்படுத்திவிடுகின்றன.. எனவேதான், நீதிமன்ற உத்தரவுப்பட மதுபான கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் மதுபானக் கடைகளில் 10 ரூபாய் அதிகமாக மது பானங்கள் விற்கப்பட்டன. காலி பாட்டிலை திருப்பி கொடுத்து 10 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவும், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மலைப் பகுதிகள் உள்ள 9 மாவட்டங்களில் உள்ள மதுபானக் கடைகளில் அமல்படுத்தப்பட்டது.
காலி பாட்டில்கள்
பிறகு 7 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், எஞ்சியிருக்கும் மாவட்டங்களிலும் தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரி அது முறைப்படுத்தப்பட்டும் உள்ளது..
இதனிடையே, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமர்த்தாமல், தனியாக ஊழியர்களை நியமிக்கக் கோரியும், காலி பாட்டில்களை வைக்க தனி இடம் உள்ளிட்ட வசதிகள் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
ஊழியர்களை நியமிக்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் தாக்கல் செய்த மனுவில், "டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் தற்போது 12 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் பணிக்கு டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை நியமித்தால் பணிச்சுமை ஏற்படும்.
ஆகவே டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமர்த்தாமல், தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். காலி பாட்டில்களை வைக்க தனி இடம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 1-க்கு தள்ளி வைப்பு
இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் தொடர்பாக, ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மனுதாரர் சங்கம், அந்த குழுவை அணுகலாம்,'' என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக மனு தாக்கல் செய்ய, அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications