ரூ.100 கோடியில் 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த கேஸ்.. விசாரணைக்கு ஆஜராவாரா M.R விஜயபாஸ்கர்? இறுகும் பிடி
சென்னை: 100 கோடி நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை வருமான வரித்துறை மே 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.. பினாமி சொத்துகள் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை இந்த சம்மனை அனுப்பியிருந்தது. எனவே இன்றைய தினம் விசாரணைக்கு விஜயபாஸ்கர் ஆஜராவார் என தெரிகிறது.
கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக மேலக்கரூர் சார்பதிவாளர் கரூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது.. இந்த புகாரில், யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவு - கைது
அதேபோல, குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி வாங்கியதாக விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கரூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கிடைக்காததால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார்.
அவரை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த வருடம் ஜூலை மாதம் கேரளாவில் கைது செய்யப்பட்டார்... பிறகு அவரது சகோதரர் சேகரும் கைது செய்யப்பட்டார்.. இந்த விவகாரத்தில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தங்களது விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. முக்கியமாக 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்களை வைத்து விசாரணை நடந்து வருகிறது..
இன்று ஆஜராவாரா?
இதில், வருமான வரி புலனாய்வு பிரிவில் இருக்கும் பினாமி தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலம் விஜயபாஸ்கரின் பினாமி சொத்து இல்லை என்றும், பினாமி பரிவர்த்தனை மூலமாக வாங்கப்படவில்லை என்றும் நிரூபிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, நிலத்தின் உரிமையாளருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் அவர் சார்பில் ஒருவர் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து, கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
பிறகு விஜயபாஸ்கர், நில உரிமையாளர்கள் பிரகாஷ் மற்றும் ஷோபனா ஆகியோருக்கு மே 12ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.. பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ், வரும் 23-ம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் அல்லது அவருடைய வழக்கறிஞர் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக மீண்டும் வருமான வரித்துறை இந்த சம்மனை அனுப்பியிருந்தது.. எனவே, இன்றைய தினம் எம்ஆர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராவார் என தெரிகிறது..
இறுகுகிறது பிடி?
விசாரணைக்கு பிறகே வழக்கின் நிலை குறித்து விரிவாக கூற இயலும் என்று வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.. ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், நில அபகரிப்பு வழக்கும் சேர்ந்துள்ளதால், இது விஜயபாஸ்கருக்கு மேலும் சிக்கலை தரும் என்றே தெரிகிறது..
அதுமட்டுமல்ல, அதிமுக பாஜக கூட்டணி அமைத்துவிட்டதால், விசாரணை அமைப்புகள் அதிமுகவை பக்கம் திரும்பாது என்று கணிக்கப்பட்டது. ஆனால், விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது அரசியல் களத்தின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications