ரூ.1000 உரிமைத்தொகை வராதா? புதுஸா வந்த புகார்.. திடீர்னு உயர்ந்த வாகன வரிகள்.. தமிழக அரசு முடிவென்ன
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டம்தான், வாகனங்களின் வரி உயர்வுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது, பரபரப்பை தந்து வருகிறது.
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக, தமிழ்நாடு முழுவதுமிருந்து மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.. அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகிறார்கள்.

அவைகளில், 8 லட்சம் பேர் ரூ.1000 உரிமைத் தொகை பெற தகுதிவாய்ந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இவர்கள் அனைவருக்கும் இன்று முதல் மெசேஜ் அனுப்பும் பணிகளும் ஆரம்பமாகி உள்ளன.
வங்கி கணக்கு: செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 14ம் தேதி மட்டும பயனாளர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.. இந்த மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் மக்களின் வசதிக்காக முன்கூட்டியே உரிமைத்தொகையை வரவு வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் எழவும், அரசும் இதனை பரிசீலித்துள்ளது.
அதன்படி, புதிதாக மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. மற்றொருபக்கம், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களும் தகுதிவாய்ந்தவர்களும் 1000 ரூபாய் பெற விண்ணப்பம் செய்யலாம் என்று சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், பெண்கள் தரப்பில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சலசலப்புகள்: ஆனாலும், இந்த உரிமைத்தொகை திட்டம் குறித்த சலசலப்புகள் அடங்கவில்லை. பொதுமக்களிலேயே ஒருசாரார் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.. மேல்முறையீடு செய்தும்கூட, அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்களாம். இதனால், உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள், போராட்டங்களிலும், சாலை மறியலிலும் ஈடுபடுவது ஆங்காங்கே நடந்தன.. இந்நிலையில், லாரி உரிமையாளர்களும் புது குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள்.
லாரிகள் உட்பட அனைத்து ரக வாகனங்களுக்கும் காலாண்டு வரி, 40 சதவீதத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 9ம் தேதி, லாரி உரிமையாளர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்துகிறார்கள்.
அதிருப்தி: இதுகுறித்த ஆலோசனை கூட்டமானது, சேலத்தில் நடந்தது.. இந்த கூட்டத்துக்கு பிறகு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு மாநில தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"இந்த ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சிம்டா, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் ஆகியன ஆதரவு அளித்துள்ளதால், வெளி மாநில லாரிகள் தமிழக எல்லையில் நிறுத்தப்படும். ஸ்டிரைக்கால் லாரி உரிமையாளர்களுக்கு, 300 கோடி ரூபாய்க்கு ரூபாய்க்கு வாடகை இழப்பு ஏற்படுவதோடு, 5,000 கோடி மதிப்புள்ள சரக்குகளின் பரிமாற்றத்தில் முடக்கம் ஏற்படும்.
சரக்கு பரிமாற்றம்: தமிழகத்தில் உள்ள, 6.50 லட்சம் கனரக வாகனங்களும், சரக்கு பரிமாற்றத்தில் ஈடுபடும், 23 லட்சம்... இலகு ரக வாகனங்களும் ஸ்டிரைக்கில் பங்கேற்க உள்ளன. தீபாவளி பண்டிகை நேரத்தில் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல, அரசின் கவனத்தை ஈர்க்கவே வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், மாநில அரசு இதுவரை அழைத்து பேச்சு நடத்தாததால், ஸ்டிரைக் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில், 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பதற்காக, வாகனங்களுக்கான வரி உயர்வு, ஆன்லைன் வழக்குப்பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.. இந்த தொகை எங்கள் வீட்டு பெண்களுக்கு கிடைப்பது இல்லை. யாரையோ திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக, லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
பேச்சுவார்த்தை: அதனால், அரசு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க முன் வருவதோடு, எங்களை உடனடியாக அழைத்து பேச்சு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications