"இந்த" 2 விஷயமும் மாறுதா? ரூ.1000 அக்கவுண்ட்டில் வருதா? பொங்கல் பரிசு தொகையில் ஹைகோர்ட் சொல்வதென்ன
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் சூழலில், திடீரென 2 விஷயங்களில் மாற்றம் இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. என்ன காரணம்?
கடந்த மாதம், சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர்கூட்டுறவு சங்கம் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கினை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.
பலன்கள்: அப்போது அவர், 'மோசடிகளை தடுக்க அரசு திட்டமிட்டாலும், ஏமாற்றுவோர் புதுமையான வழிகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றனர்.. அதனால், பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பணப் பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க முடியும்.. இதனால் நேரமும் மிச்சமாகும்" என்று தமிழக அரசுக்கு யோசனை கூறியிருந்தார்.

அந்தவகையில், உரிமைத் தொகையும், பொங்கல் பணமும் வங்கி கணக்கில் செலுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வந்தன.. இந்நிலையில்தான், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ரேஷன் அட்டை: "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2017 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் 20 வகையான பொருட்களுடன், ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. இந்த தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும், கரும்பு கொள்முதலுக்கான பணத்தை கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
மனுதாரர்கள்: இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "தமிழகத்தில் அனைத்து மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட ரூ.1,000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளை சர்க்கரை கொள்முதல்செய்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க அரசு தயாராக உள்ளது.
கடந்த ஆண்டு மக்களுக்கு வழங்க வெல்லம் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டது. அந்த வெல்லம் உருகிவிட்டதாகவும், கெட்டுப்போய்விட்டதாகவும் புகார்கள் வந்தன. இந்த மனு கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு உகந்தது இல்லை. தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
கரும்பு விவசாயிகள்: இதையடுத்து நீதிபதிகள், "தமிழக அரசின் பல்வேறு திட்டங்களில், குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவதைப்போல, பொங்கல் பரிசுத் தொகையையும் வங்கிக் கணக்கில் செலுத்தலாமே? கரும்பு கொள்முதல் பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தலாமே? இதனால் தமிழக அரசுக்கு என்ன சிக்கல்வந்துவிட போகிறது. சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.
இப்போது முடியாவிட்டாலும், அடுத்த பொங்கல் பண்டிகையின்போதாவது செய்யலாம். பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.. இந்த மனு இத்துடன் முடித்துவைக்கப்படுகிறது என்று கூறி உத்தரவிட்டனர்.
பெருகும் ஆர்வம்: இதையடுத்து, பொங்கலுக்கு சர்க்கரை பதில் வெல்லம் வழங்கப்படுமா? அல்லது கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே பணம் செலுத்தப்பட்டுவிடுமா? என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications