அயர்ன் பாக்ஸை பார்த்ததுமே ஆடிப்போன ஆபீஸர்ஸ்.. சென்னையில் ரூ.175 கோடி தங்க கட்டிகள்! சபாஷ் அதிகாரிகள்
சென்னை: சென்னை விமான நிலையத்தில், கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரை, 175 கோடி ரூபாய் மதிப்பிலான, 258 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நம்பிக்கை தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும் நேற்றுகூட தங்கத்தை கடத்தியவர்கள் தலைநகரில் பிடிபட்டுள்ளனர்..
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தும் சம்பவங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்து வருகின்றன.. இவைகளை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட போதிலும், விதவிதமான கடத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கள்ளச்சந்தை: இதற்கு காரணம், உள்நாட்டில் வரி விதிக்கப்பட்ட தங்கத்தின் விலை அதிகம் என்பதால், வெளிநாடுகளிலிருந்து இப்படி கடத்தி வந்து, கள்ளச்சந்தையில் விற்றுவிடுகிறார்கள்.. கிலோ கணக்கிலான தங்கத்தை விமானங்கள் அல்லது கப்பல் மூலமாக கடத்துவதால், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவிடுகிறது.
எனவேதான் கடத்தலை ஒழிக்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ், சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலானய்வு துறை செயல்படுகிறது. இதனிடையே, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைக்கவும், கடத்தல் சம்பவங்களும் குறைய துவங்கின.
ஏர்போர்ட்: அந்தவகையில், கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 175 கோடி ரூபாய் மதிப்பிலான 258 கிலோ தங்கம் சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம்.. அதாவது, 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை, 218 கோடி ரூபாய் மதிப்பிலான, 303 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 258 கிலோவாக தற்போது கடத்தல் குறைந்துள்ளது.
இது குறித்து சுங்கத்துறை உயர் அதிகாரிகள் சொல்லும்போது, சென்னை ஏர்போர்ட்டில் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பு பயணிகளுமே கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்கம் மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண் அதிகாரிகள்: அதேபோல, சுங்க பிரிவில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய சர்வதேச முனையத்திலும் செக்யூரிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.. இதனால் கடத்தல்காரர்களால், தீவிரமான சோதனைகளிலிருந்து எளிதில் தப்ப முடிவதில்லை. சுங்க வரி குறைப்பால், தங்கம் கடத்துவதும் குறைந்துள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, டெல்லி ஏர்போர்ட்டில் 2 பேரிடம் 979 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து டெல்லிக்கு நேற்றிரவு வந்த விமானத்தில், இந்தியாவை சேர்ந்த ஆண் பயணி கொண்டு வந்த உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனைகள்: முதலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்பட்டது.. எதுவுமே சிக்கவில்லை. பிறகு எக்ஸ்ரே மூலம் சோதனை செய்ததில், சில சந்தேகங்கள் எழுந்தன. அதனால், அந்த பயணியின் உடமைகளை பிரித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சூட்கேசுக்குள் எலெக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ் ஒன்று இருந்தது. அந்த அயர்ன் பாக்ஸை வெளியே எடுத்து சோதனை செய்தபோது, அதற்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட ரூ.46.80 லட்சம் மதிப்பிலான 600 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்க கடத்தல்: அதேபோல, சவுதியின் ஜெட்டா நகரில் இருந்து வந்த இன்னொரு விமானத்தில் வந்த ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவரது சூட்கேஸிலும் 379 கிராம் எடை கொண்ட 24 காரட் தங்கம், மறைத்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.29 லட்சமாகும். இந்த 2 தங்க கடத்தல் சம்பவமும் ஒரே நாளில், ஒரே ஏர்போர்ட்டில் நடந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications