ஹோட்டலுக்கு போறீங்களா.. அப்ப இந்த விஷயத்தை மறக்காதீங்க.. "2000 ரூபாய்" கறார் முடிவில் வர்த்தகர்கள்
சென்னை: இன்று செப்டம்பர் 29ம் தேதி முதல் ஆம்னி பஸ்களில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என்று வர்த்தகர்களும் அறிவித்துவிட்டனர். ஓட்டல்கள் தரப்பிலும் அறிவித்துவிட்டனர்.
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும், அதற்குள் அருகிலுள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

காலக்கெடு: நாளை 30ம் தேதியுடன் காலக்கெடு முடிகிறது.. இதில், நேற்று மிலாடி நபி விடுமுறை, இன்று மற்றும் நாளை விடுமுறை இல்லை என்றாலும் (காலாண்டு விடுமுறை பள்ளிகளுக்கு), கடைசி நேரத்தில் மாற்றுவது கடினம் என்ற நிலை உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசு துறை நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டன.
இதேபோல் செப்டம்பர் 28-ம் தேதிக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் பேருந்துகளில் டிக்கெட் வாங்க கொடுத்தால் அதை வாங்க வேண்டாம் என கண்டக்டர்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 29ம் தேதி முதல் அதாவது இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆம்னி பேருந்துகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி: அத்துடன், ''ரிசர்வ் வங்கியின் காலக்கெடு முடிவதால் இன்று முதல், அனைத்து ஆம்னி பஸ்களிலும், 2000 ரூபாய் நோட்டை பயணியர் கொடுத்து, டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுகக் கொண்டுள்ளது.
அதேபோல, இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கப்போவதில்லை என்று வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர். தமிழக பெட்ரோலிய விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி. முரளி இதுகுறித்து சொல்லும்போது, மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது. அந்த நாட்களில், 2000 ரூபாய் நோட்டை வாங்கினால், செவ்வாய்க்கிழமை அதை வங்கியில் செலுத்தும்போது வாங்க மறுப்பார்கள்.. அதனால், இன்று முதல் பெட்ரோல் பங்க்குகளில், 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என்றார்.
ஹோட்டல்கள்: சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் ரவி இதுகுறித்து சொல்லும்போது, ஹோட்டலில் சாப்பிட வருபவர்கள், 500 ரூபாய் நோட்டை தான் அதிகம் எடுத்து வருகிறார்கள்.. 2,000 ரூபாய் நோட்டு பெரிதாக யாரும் எடுத்து வரவில்லை. ஹோட்டல்களில் ஜூலை முதலே அந்த நோட்டை வாங்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications