விடுபட்ட நிவாரணத் தொகை.. சென்னை முடிச்சூர் ரேசன் கடைகளில் என்னாச்சு?.. பணம் ரூ.6000 கிடைக்கலயாமே
சென்னை: வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்குள்ளான மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். நிவாரண உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது.. பெரும்பாலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இடுப்பு அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது..

குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்துவிட்டதால், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். எனவே, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ 6 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளது.
குடும்ப அட்டை: குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து நிவாரணம் பெறலாம் என்று கூறியிருந்தது. மேலும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்டவைகளை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் டோக்கன் கிடைக்காதவர்கள், ரேஷன் கடைகளில் பணம் கிடைக்காதவர்கள் கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் இருக்கும் விண்ணப்பத்தை பெற வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் அதை பரிசீலனை செய்து பணம் கொடுக்கப்படும் என அரசு மேலும் கூறியிருக்கிறது..
வெள்ளம்: தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவி தொகையாக ரூ.6 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான பயனாளிகளின் பெயர்பட்டியல் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் முடிச்சூர் பகுதியும் ஒன்று.. முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில், மறுபடியும் வெள்ளநீரில் மூழ்கி மிதந்தன.. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமானால், அடையாறு ஆற்றை இன்னும் அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும்.. முடிச்சூர் பகுதியில் உள்ள சீக்குனா ஏரி கால்வாயை கட்டன் கால்வாய் முறையில் அமைத்து அடையாறு ஆற்றில் விடவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
வெள்ள பாதிப்பு: இந்நிலையில், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முடிச்சூர் மதனபுரம், அமுதம் நகரில் உள்ள ரேஷன்கடைகளில் சுமார் 400 பேரின் பெயர்கள் வெள்ள நிவாரண உதவி தொகை வழங்குவகுவதற்கான லிஸ்ட்டில் இல்லையாம்.. இதனால் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்குள்ளான மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.. அங்கிருக்கும் ரேஷன் கடைகளிலும் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது.
மேலும், நிவாரண தொகை வழங்கும் லிஸ்ட்டில் விடுபட்டவர்கள் நிவாரண தொகை பெறுவதற்காக விண்ணப்பம் வாங்கி அதனை பூர்த்தி செய்து தருவதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.. முறையாக ஆய்வு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முடிச்சூர் மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications