தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு
சென்னை: டெண்டர் நடைமுறைகள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி வழங்கும் செயல்முறைகளில் ரூல்ஸ் மாறி உள்ளது. வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டிட வரைபட அனுமதி வழங்கும் நடைமுறைகளிலும் காலக்கெடுவுடன் கூடிய வழிகாட்டுதல்களை சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்ககம் மற்றும் பேரூராட்சிகள் இயக்ககம் வெளியிட வேண்டும். அதன்படி கட்டிட அனுமதி விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குநருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறுகையில், "உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளிலும் டெண்டர் நடைமுறை வெளிப்படையாகவும், நியாயமானதாகவும், சிக்கனமானதாகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, தமிழ்நாடு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை சட்டம், 1998 மற்றும் தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகள், 2000 ஆகியவற்றின் விதிமுறைகளை அனைத்து டெண்டர் விடுக்கும் அதிகாரிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

மேலும், டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து தள ஆய்வு சான்றிதழ், எந்திரங்கள் இருப்பு சான்றிதழ் அல்லது இதுபோன்ற சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் என்ஜினீயர்களிடம் இருந்து பெற வேண்டும் என்று தகுதி நிபந்தனையாக வலியுறுத்தும் நடைமுறையை தவிர்க்க வேண்டும்.
இத்தகைய நிபந்தனைகள் போட்டித்தன்மையை பாதிக்கும் அபாயம் உள்ளதாக அரசு கருதுகிறது. டெண்டர் தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் விவரங்களும் முடிந்தவரை இணையவழியில் வெளியிடப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்புகள் வெளிப்படையான முறையில் நடைபெற வேண்டும்.
மேலும் கட்டிட வரைபட அனுமதி வழங்கும் நடைமுறைகளிலும் காலக்கெடுவுடன் கூடிய வழிகாட்டுதல்களை சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்ககம் மற்றும் பேரூராட்சிகள் இயக்ககம் வெளியிட வேண்டும். அதன்படி கட்டிட அனுமதி விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்பட வேண்டும். அனுமதிக்கான கட்டணங்கள் முழுமையாக இணையவழியில் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அல்லது அவர்களது என்ஜினீயர்கள் ஆகியோரை தேவையற்ற முறையில் அலுவலகங்களுக்கு நேரில் வரவழைக்கப்படக்கூடாது. அனைத்து விளக்கங்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களும் இணையவழி மற்றும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் முழுமையாக பின்பற்றப்படுவதை நகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மற்றொரு சுற்றறிக்கையில், அனைத்து அலுவலர்களும் தினமும் காலை 7 மணிக்கு முன்பாக கள ஆய்வில் ஈடுபட வேண்டும். போலியான வருகைப் பதிவுகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் குறைகளுக்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். நகரம் முழுவதும் சுவரொட்டிகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications