பதவி முடிந்தும் பஞ்சாயத்து.. ஊசலாடும் உள்ளாட்சி நிர்வாகம்? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த விளக்கம்!
சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பணிகள் எந்தவித தொய்வின்றி அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள் மூலம் முறையாக செயல்பட்டு வருகின்றன எனவும், ஊராட்சி சார்ந்த நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் எவ்வித தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில், 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்ததையடுத்து, அந்த உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தினைக் கவனிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி அலுவலகங்கள் தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு அலுவலகங்களில் பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் தலையீடு அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படைப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தேர்வு, புதிய மனைப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவது, கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்குவது என அனைத்திலும் பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தலையிடுவதாகவும், தங்களைக் கேட்காமல் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போடுவதாகவும், இதன் விளைவாக, தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் விநியோகம், சாலைப் பணிகள் போன்றவை கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அளிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பணிகள் எந்தவித தொய்வின்றி அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள் மூலம் முறையாக செயல்பட்டு வருகின்றன என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் 2019-இல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு 28 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 05.01.2025 அன்று முடிவடைந்ததை அடுத்து இந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் அரசால் நியமனம் செய்யப்பட்டனர்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள் அனைவரும் முறையே 06.01.2025 அன்றே பொறுப்பேற்றனர். ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு கிராம ஊராட்சிகளின் செயல் அலுவலராக செயல்பட்டுவந்த கிராம ஊராட்சி தலைவர்கள் மேற்கொண்ட பணிகளை அந்தந்த கிராம ஊராட்சியின் தனி அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திறம்பட மேற்கொண்டு வருகின்றனர். அந்தந்த ஊராட்சியின் ஊராட்சி செயலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை அலுவலர்களுடன் பொதுமக்களின் அடிப்படை தேவை சார்ந்த புகார்கள் மற்றும் குறைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் கிராம ஊராட்சியின் நிதி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட TN PASS தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்குகள் திட்டத்தில் தனி அலுவலர்கள் கையாளுவதற்கான மாற்றங்கள் முழுவதும் மேற்கொண்டு, தற்போது ஊராட்சி சார்ந்த நிதி பரிவர்த்தனைகளை அந்தந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் முதல் நிலை ஒப்புதல் வழங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் இறுதி ஒப்புதல் அளித்து அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் எவ்வித தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications