உள்ளாட்சி தேர்தலில் செம்ம ஷாக்... கொத்து கொத்தாக அதிமுகவுக்கு தாவிய பா.ம.க. மாநில நிர்வாகிகள்!
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் பா.ம.க.வின் மாநில நிர்வாகிகள் பலரும் கொத்து கொத்தாக அதிமுகவில் இணைந்து வருவது அக்கட்சியின் மூத்த தலைவர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 7 மாவட்டங்கள் வட தமிழகத்தில் உள்ளன. இந்த மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
ஆகையால் அதிமுகவிடம் பா.ம.க. அதிக இடங்களை இயல்பாகவே கேட்கும். ஆனால் பா.ம.க. கேட்கும் அத்தனை இடங்களையும் நிச்சயம் அதிமுக கொடுக்காது என்பது அந்த கட்சிக்கும் தெரியும். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என பா.ம.க. முடிவு செய்து அறிவித்தது.

திமுகவின் வியூகமா?
அதே நேரத்தில் பாமக ஆதரவுடன் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றக் கூடாது; அதற்காக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பா.ம.க. தனித்துப் போட்டியிட வேண்டும் என திமுக தலைமை விரும்பியது. அதனையே பா.ம.க.வும் அரங்கேற்றியிருக்கிறது எனவும் சில செய்திகள் வெளியாகின. அதாவது திமுகவுடன் நல்லுறவில் இருக்கும் பா.ம.க, அந்த கட்சியின் நலனுக்காகவே இத்தகைய முடிவை எடுத்தது எனவும் கூறப்பட்டது.

அதிமுகவுக்கு தாவல்
இது பா.ம.க.வில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் பா.ம.க.வின் மாநில நிர்வாகிகள் கொத்தாக திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். பாமகவை விட்டு அதிமுகவுக்கு போனவர்களில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் மலர்சேகர், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் இளங்கோ, முன்னாள் நகர செயலாளர் வடபழனி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெங்கநாதன், மாநில மாணவரணி துணைச்செயலாளர் சம்பத், மாநில விவசாய அணி செயலாளர் அன்பு, வழக்கறிஞர் அணி செந்தில், திண்டிவனம் நகர வன்னியர் சங்க தலைவர் ஞானவேல் நகர துணை செயலாளர் ராமன், நகர அமைப்பாளர் சௌந்தர் உள்ளிட்டோர் முக்கிய நிர்வாகிகள். அதுவும் திண்டிவனத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு வலதும் இடதுமாக இருந்தவர்கள் இவர்கள்.
Recommended Video

தனித்து போட்டி அறிவிப்புக்கு எதிர்ப்பு
அதிமுகவில் இணைந்த அனைவரும் சி.வி.சண்முகத்திடம் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீதான அதிருப்தியை கொட்டித் தீர்த்திருக்கின்றனர். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டி என டாக்டர் ராமதாஸ் அறிவித்ததை பா.ம.க. நிர்வாகிகளில் 90% பேர் ஏற்கவில்லை எனவும் சி.வி.சண்முகத்திடம் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்காமல் ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் மட்டுமே முடிவெடுத்து நிர்வாகிகள் மீது திணிக்கிறார்கள் எனவும் புலம்பி இருக்கின்றனர்.

தாவ தயாராக இருக்கும் மூத்த தலைவர்கள்?
மேலும் பாமகவின் முன்னணி தலைவர்கள் பலரும் அதிமுகவுக்கு வர தயாராக இருக்கின்றனர். இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார் ஏழுமலை. உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக விழுப்புரத்துக்கு மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும்போது பாமக நிர்வாகிகளை அதிமுகவில் சேர்க்கும் இணைப்பு விழாவை நடத்தலாம் எனவும் ஆலோசித்திருக்கின்றனர். இருந்தபோதும் தேர்தல் நேரத்தில் இணைப்பு விழாவை பிரமாண்டமாக நடத்தப் போய் அது வேட்பாளரின் செலவு கணக்கில் வந்துவிடும்... அதனால் மாற்று வழி என்ன என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இப்படி பாமகவின் மூத்த மாநில நிர்வாகிகள் கூண்டோடு அதுவும் திண்டிவனத்திலேயே அதிமுகவில் இணைந்திருப்பது பாமக தலைமையை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications