‘டெண்டர் முறைகேடு வழக்கு’: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெண்டர் முறைகேடு விவகாரத்தில், 10 வாரத்தில் விசாரணையை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணி மீது ஆர்.எஸ்.பாரதி புகார் வழக்கு
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிமுக ஆட்சியின்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அவரது வழக்கில், உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், அவரின் சகாக்களுக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது.

உறவினர் நண்பர்களுக்கு முறைகேடாக டெண்டர்
அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய கோரியிருந்தார். அதேப்போன்று அறப்போர் இயக்கமும் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடர்ந்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த மாதம் தொடக்கத்தில் உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான மனுக்களையும் முடித்து வைத்தது.
இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவில்," அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுத்ததாகவும், மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தலையிட்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
மேலும், தற்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, அரசியல். காழ்புணர்ச்சி காரணமாக வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க முயல்கின்றனர். எனவே இந்த விவகாரத்தில் 10 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது.

தமிழக அரசு கேவியட் மனு
முன்னதாக, இந்த விவகாரத்தில் தங்களது தரப்பு வாதங்கள் கேட்காமல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தும் கேவியட் மனுவை தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த கேவியட் மனுவையும் கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications