சேலம் ஏர்போர்ட்டுக்கு “டாக்டர் எடப்பாடி பழனிசாமி” பெயர் வைக்கணும்.. டெல்லிக்கு பறந்த கோரிக்கை!
சென்னை: சேலம் விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி பெயரை வைக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் அளிக்க, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அதிமுக நிர்வாகியான வழக்கறிஞர் சேலம் மணிகண்டன்.
சேலம் விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி பெயரை சூட்டவேண்டும் என அதிமுகவுக்கு ஆதரவாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் வழக்கறிஞரான சேலம் மணிகண்டன், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பி ஆவண செய்வதாக அவர் உறுதி அளித்துள்ளதாக சேலம் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

சேலம் மணிகண்டன் அளித்துள்ள கடிதத்தில், சேலம் 1993 ஆம் ஆண்டு முதல் சிவில் விமானப் போக்குவரத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. சேலம் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியின் மையமாகவும், சுற்றியுள்ள மாவட்டங்களை சென்னை மற்றும் பெங்களூருடன் இணைக்கிறது. சேலம் ஒரு தொழில்துறை மாவட்டமாகத் திகழ்கிறது. எஃகு தொழில்கள், ஆட்டோமொபைல் மையம் ஆகியவற்றைக் கொண்ட எப்போதும் வளர்ந்து வரும் மாவட்டம். ஜவுளி மற்றும் பெரிய விவசாய வளத்தையும் கொண்டுள்ளது.
சேலத்திற்கு வணிக விமானங்கள் அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது பிரதமரின் "தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை" (NCAP) உதான் திட்டத்தின் கீழ் மிகவும் தேவையான முயற்சியாகும். இந்த முயற்சிகளுக்கு நன்றி.
சேலத்தில் விரைவில் சரக்கு சேவைகளும் மேற்கொள்ளப்படும் என்று நான் விரும்புகிறேன்.
மேலும், உங்கள் பரிசீலனைக்கு பின்வருவனவற்றை முன்வைக்க விரும்புகிறேன்: இந்தியாவின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலச்சாரி தொடங்கி பல புகழ்பெற்ற ஆளுமைகளின் தாயகமாக சேலம் இருந்து வருகிறது.சேலம் முன்னாள் மத்திய அமைச்சர் (மறைந்த) ரங்கராஜன் குமாரமங்கலம் உள்ளிட்டோரின் தாயகம். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் மாவட்டம்.
இபிஎஸ் அய்யா என்று பிரபலமாக அறியப்படும் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதிக்கும் கொண்டலாம்பட்டி தொகுதிக்கும் இடையில் சேலம் விமான நிலையத்திலிருந்து அருகில் உள்ள சிலுவம்பாளையம் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். எனவே Dr. Edappadi palanisami domestic airport என சேலம் விமான நிலையத்திற்கு பெயர் வைக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications