'வெறும் 15 நிமிடம்..' 74,000 பணத்துடன் இளைஞர் தொலைத்த பையை.. நள்ளிரவில் மீட்ட சைதாப்பேட்டை போலீசார்
சென்னை: சைதாப்பேட்டை உணவகத்தில் 74 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட முக்கிய பொருட்களை வைத்திருந்த பையை இளைஞர் தவறவிட்ட நிலையில், போலீசார் அதை வெறும் 15 நிமிடத்தில் மீட்டுக்கொடுத்துள்ளனர். துரிதமாகச் செயல்பட்ட போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சேலம் மேட்டூர் பகுதியில் வசிக்கும் சர்வேஸ்வரன், சொந்தமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். வேலை விஷயமாக இவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்துள்ளார்.
சென்னையில் தனது பணியை இரவு ஊருக்கு திரும்பத் திட்டமிட்டிருந்தார். சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு, சேலத்திற்குப் புறப்பட்டுள்ளார்.

சேலம் இளைஞர்
கார் மூலம் சர்வேஸ்வரன் சேலத்திற்கு புறப்பட்டுள்ளார். அப்போது சுமார் இரவு 11 மணியளவில் உளுந்தூர்பேட்டை அருகே கார் சென்று கொண்டிருந்த போது தான், முக்கிய உடைமைகள் அடங்கிய பையை சைதாப்பேட்டை உணவகத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டது அவருக்கு நினைவிற்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சர்வேஸ்வரன் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எண்ணை இணையத்தில் இருந்து எடுத்துள்ளார்.

சைதாப்பேட்டை போலீசார்
சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கால் செய்த சர்வேஸ்வரன், பதற்றத்துடன் நடந்த அனைத்தையும் விளக்கியுள்ளார். இதையடுத்து அந்த உணவகத்திற்கு விரைந்து சென்ற சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு இருந்த ஊழியர்களிடம் என்ன நடந்தது என்பதை விளக்கி, பையைத் தேடியுள்ளனர். அப்போது சர்வேஸ்வரன் விட்டுச் சென்ற அதே இடத்தில் பை இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

வெறும் 15 நிமிடங்கள்
வெறும் 15 நிமிடங்களில் இது அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. இதன் பிறகு உடனடியாக சர்வேஸ்வரனை தொடர்பு கொண்ட போலீசார், பேக் மீட்கப்பட்ட விவரத்தை அவரிடம் தெரிவித்துள்ளனர். இதன் பிறகே அவருக்குச் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக சனிக்கிழமை அதிகாலை மீண்டும் சென்னை வந்த அவர், தைசாப்பேட்டை போலீசாரிடம் சென்ற பேக்கில் இருந்த உடைமைகளின் விவரங்களைத் தெரிவித்தார். சர்வேஸ்வரனின் அடையாள அட்டையைச் சரிபார்த்த போலீசார், அவரிடம் அந்த பையை ஒப்படைத்தனர்.

காவலர்கள் நமது நண்பர்கள்
பையில் இருந்த பொருட்களைச் சரிபார்த்த போது 74,110 ரூபாய் ரொக்கம், ஆப்பிள் டேப் என அனைத்தும் உடைமைகளும் இருந்தது. இதன் பிறகே சர்வேஸ்வரனுக்கு முழு நிம்மதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு நேர்ந்த சம்பவத்தையும் அப்போது போலீசார் எப்படி துரிதமாகச் செயல்பட்டு தனக்கு உதவினார்கள் என்பதையும் விளக்கி சர்வேஸ்வரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எழுத்துப்பூர்வமாகப் புகார் தெரிவிக்காமல், போனில் தெரிவித்த தகவல்களை வைத்து போலீசார் தனக்கு உதவுவார்கள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று தெரிவித்த அவர், யாரோ ஒரு சில காவலர்கள் செய்யும் தவறுக்கு மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணம் உருவாக்கி உள்ளது என்றும் உண்மையில் காவலர்கள் நமது நண்பர்கள் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications